Request members at Canada to help to get
  • Dear Members
    One more novel released at Canada. I am unable to get this novel. Request any of our members at Canada to help to get this novel

    வேல் விழியாள் மறவன் – நாவல் ஒரு கண்னோட்டம்!
    -பிறைசூடி சந்திரசேகர்
    புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களது சாதனைகள் அளப்பரியன. கனடாவில் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியுற்ற, நமது தமிழ் மொழி கலை, கலாச்சாரம், இலக்கியம் எனப் பல துறைகளிலும் எண்ணற்ற சாதனைகளைப் படைத்து வருகின்றது. இவற்றில் இலக்கியத்துறையில் “வேல்விழியாள் மறவன்” என்ற வரலாற்று நாவலைப் படைத்த சிவநயனி முகுந்தன் அவர்கள் பாராட்டுதலுக்கு உரியவர்.

    அவரது படைப்பான இந்நாவல் பேராசிரியர் கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்களின் தலைமையில் 30-06-2012 அன்று கனடா டொரண்டோ நகரில் சிறந்த முறையில் வெளியிடப்பட்டது.
    இவ்வெளியீட்டு விழாவில் திருவாளர்கள் எஸ்.பத்மநாதன்,எஸ்.சந்திரசேகரன். முனைவர் பார்வதி கந்தசாமி ஆகியோர் நூல் விமரிசனம் செய்தார்கள்.
    அழகான தலைப்புடன் இந் நாவல் அமைந்துள்ளது. வரலாற்று நாவல் எழுதுவதற்குத் துணிவும் தன்னம்பிக்கையும் அவசியம் தேவை. வரலாற்று ஆதாரங்களைத் தேடுவதுடன் அதனைக் கற்பனையும் கலந்து வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டும்வகையில் எழுத வேண்டும். சிவநயனி முகுந்தன் அவர்கள் இதில் வெற்றி அடைந்துள்ளார். தமிழின் மிகச் சிறந்த வரலாற்று நூல்களில் ஒன்றாக இந் நூல் இடம் பெறும் என்பதில்
    எந்த ஐயமும் இல்லை.
    கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்; உறையூரில் ஆட்சி செய்த சோழமன்னன் கரிகாலன், ஈழத்தில் உள்ள அநுராதபுரத்தினை ஆட்சிசெய்த வங்கநாதிகதிஸ்ஸன் என்னும் மன்னனுடன் போர் புரிந்து, அதில் வெற்றிபெற்று, அங்கிருந்து பன்னிரண்டாயிரம் ஈழத்து வீரர்களைத் தன்னுடன் உறையூரிற்கு அழைத்துச்சென்று, அங்கே கல்லணை கட்டினான் என்பது வரலாற்றுச் செய்தி. அச் செய்தியை மையமாகக் கொண்டு இவ்
    நாவல் புனையப்பட்டுள்ளது. ஈழத்துடன் தொடர்பு பட்டு வெளிவந்த நாவல்களில் கல்கியின் பொன்னியின் செல்வன், நா. பார்த்தசாரதியின் மணிபல்லவம், அகிலனின் வேங்கையின் மைந்தன் ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.
    அவற்றிட்குப் பின் எழுந்த ஈழம் சார்ந்த வரலாற்று நாவல் இதுவாகும். அக்கால ஈழத்தின் வரலாறு ஆவணப்படுத்தப் படாமையினால் இந் நூல் ஆசிரியை மிகவும் சிரமப்பட்டு இயன்றளவு உண்மைச் சம்பவங்களை வைத்து கற்பனை கலந்து எழுதியுள்ளார்.
    கல்லணை கட்டிய சோழ மன்னன் கரிகாலன் எதற்காக ஈழத்திற்குச் சென்றான்? அதன் பின்னணி என்ன? என்கின்ற கேள்விகளுக்குத் திட்டவட்டமான பதில் இல்லாதபடியால் தனது கற்பனையில் உதித்த காரணத்தை மையமாக வைத்து எழுதி இருக்கிறார். இந் நாவலின் முக்கிய கதாபாத்திரங்களாக அநபாயன், பூங்கோதை, தமிழரசி, கரிகாலன், வங்கநாசிகதீசன், நரசிம்மவரையர், சோதையன், ஜெயபாலசிங்கன், மைத்திரேய தேரர்
    ஆகியோர் இவ் நாவலை தெளிந்த நீரோட்டமாக நடத்திச் செல்கின்றனர்.
    பூங்கோதையை அநபாயன் சந்திக்கும் இடமும், இருவருக்கும் ஏற்படும் வார்த்தைச் சண்டையும், மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. இறுதியில் அது காதலாக மாறுகின்றது. பலருடைய காதல் ஆரம்பமாவதே சண்டையில்தான் என்பதை இந்நிகழ்வு உணர்த்துகின்றது. ஓரிடத்தில் அநபாயன் பூங்கோதையிடம் சொல்கிறான். “பெண்ணே நான் எங்கேயோ இருந்தேன். நீ எங்கேயோ இருந்தாய்;. ஏதோ விதிவசத்தால் இருவரும்
    சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது…” இது குறுந்தொகையில் வரும் பாடல் ஒன்றை நினைவு படுத்துகின்றது. சங்க இலக்கியத்தை சிவநயனி நன்கு கற்று அறிந்துள்ளார் என்பதற்கு இது சான்றாக உள்ளது.
    தமிழரது பண்பாட்டு விழுமியங்களை இந் நாவலில் சிவநயனி முகுந்தன் நன்கு பாதுகாப்பதை அறியமுடிகின்றது.
    அநபாயன் ஓரிடத்தில் பூங்கோதைக்கு ஆடை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. உள்ளம் தடுமாறாமல் எவ்வித உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்காது ஒரு மருத்துவர் நிலையில் நின்று உடை மாற்றுகிறான். அவள் சுயநினைவு வந்து அதனை அறிந்து தடுமாறும் போது, அவளது சங்கடத்தைப் போக்க, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறான். இங்கு தமிழரது பண்பாடு உயர்த்திக் காட்டப்படுகின்றது.
    தமிழரிடையே ஒற்றுமை அவசியம் என்பதை இந்நாவல் நன்கு உணர்த்துகின்றது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதை சில உரையாடல்கள் மூலம் குறிப்பிடுகின்றார். அநபாயன் மாதோட்ட மன்னனான நரசிம்மவரையரிடம் “நாங்களோ உறையூர். தாங்களோ ஈழம்… அப்படி இருக்கையில்…” என்று கூறுகிறான். அப்போது நரசிம்மவரையர் “யார் எங்கிருந்தாலும் என்ன? தமிழன் என்ற ஒன்று நமக்குப் போதாதா? மண்தான்
    பிரிக்கின்றதே தவிர கலையோ பண்பாடோ பழக்க வழக்கங்களோ பிரிக்கவில்லையே…” என்கிறார். இன்னொரு இடத்தில் அநபாயன் பூங்கோதையுடன் உரையாடும் போது “நாம் தமிழகத்தில் பிறந்தாலும் ஈழத்தில் பிறந்தாலும் பாரசீகத்திலே இல்லை உரோமாபுரியிலோ பிறந்திருந்தாலும் தொல்காப்பியத்தில் நெறிப்படுத்தப்பட்ட செந்தமிழை மொழியாகக் கொண்டு அதை உயிராகப் போற்றிவரும் தமிழர்கள் அல்லவா?
    இன்னும் கொடுந்தமிழ், குறுநிலம், தாய் நிலைம், சேய் நிலைம், அன்னியம் என்கின்ற பாகுபாடு நமக்குத் தேவையா…?” என்று கூறுகிறான்.
    இதிலிருந்து தமிழர் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்கிற ஆசிரியரின் ஆதங்கம் நன்கு புலப்படுகின்றது. எங்கு வாழ்ந்தாலும் தமிழர்கள் அனைவரும் ஒன்றே. தமிழர்கள் அனைவரும் இதனை உணரவேண்டும். தமிழனுக்கு எதிரி தமிழனே என்பதையும், எதிரிக்கு எம் இனத்தைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகள் எப்பொழுதும் இருந்திருக்கிறார்கள் என்பதையும் சோதையன் என்ற
    கதாபாத்திரம் உணர்த்துகின்றது.
    தன் சொந்தக் காரணத்தினால் ஏற்பட்ட பகைக்காக ஜெயபாலசிங்கன் என்ற ஹெல இனத்தவருடன் கூட்டுச் சேர்ந்து மாதோட்டத்தில் இருந்து ஆட்சிசெய்யும் நரசிம்மவரையருக்கு எதிராகச் சதி செய்கிறான். இறுதியில் ஜெயபாலசிங்கன் சோதயனைக் கைது செய்கிறான். அதற்கான காரணத்தை சோதையன் கேட்டபோது “உன் இனத்தையே காட்டிக் கொடுத்த உன்னை இன்றுவரை உயிருடன் விட்டது பெருந்தவறு. எனக்குத்
    தமிழர்களைப் பிடிக்காது. அதற்காக அவர்களை ஒருபோதும் நேர்மையற்ற முறையில் தாக்கியது இல்லை…” என்று கூறுகின்றான். ஜெயபாலசிங்கன் எதிரியாக இருந்தாலும்அவனிடத்திலும் நேர்மை இருக்கிறது என்பதை உணர முடிகிறது.
    இந் நாவலில் படைக்கப்பட்டிருக்கும் மைத்திரேய தேரர் என்கின்ற புத்த பிக்குவின் பாத்திரமும் உயர்வானது.
    தமிழருக்கும் ஹெல இனத்தவருக்கும் ஒரு பாலமாக விளங்குகிறார். இரு இனத்தவரும் பகையின்றி ஒற்றுமையாக வாழவேண்டிய அவசியத்தை உணர்த்தும் பாத்திரம் அது. புத்தபிக்குகள் அரசியலுக்கு வரக் கூடாது. அரசியலில் ஈடுபடுவது அவர்களது தொழில் இல்லை என்பதை அப்பாத்திரத்தினூடாக ஆணித்தரமாகக் கூறுகின்றார்.
    வன்னியர்களைப் பற்றிப் பலரும் அறிந்திருப்பர். ஆனால் அவர்களில் ஒரு பிரிவினரான உருத்திரவன்னியர்களைப் பற்றி எல்லோரும் அறிந்திருக்க முடியாது. இந் நாவல் மூலம் வீரமும், பண்பாடும் நிறைந்த உருத்திர வன்னியர்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிகின்றது.
    ஈழத் தமிழரது சமூகம் பெண்வழிச் சமூகம். மணம் முடிக்கும் ஆண், பெண் வீட்டில் வசிப்பது அவர்கள் மரபு.
    உறையூரின் மரபு ஆண் வாழும் இடத்தில் பெண் இணைந்து வாழும் ஆண்வழிச் சமூகம். இந்த இரு மரபும் மாறாத ஒரு முடிவினை இந் நாவலின் இறுதியில் கொடுத்திருக்கிறார்.
    626 பக்கங்களையும் 52 அத்தியாயங்களையும் கொண்ட இந் நாவல் படிக்கும் போது அடுத்து என்ன நடக்குமோ என்கின்ற ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. கரிகாலனால் உறையூரில் கட்டப்பட்ட கல்லணைக்குப் பன்னிரண்டாயிரம் ஈழத்துப் படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந் நாவலைப் படித்த பின் கரிகாலனின் உறையூரையும், கல்லணையையும் மாதோட்டத்தையும் அநுராதபுரப் பட்டினத்தையும்
    சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் யாவருக்கும் வரும்.
    வேல் விழியாள் மறவன் ஒரு பிரமாண்டமான படைப்பு. நுட்பமான தகவல்களும் நமது பண்பாட்டு விழுமியங்களும் சிறப்பாக எடுத்து உரைக்கப் படுகின்றன. அதுமட்டுமன்றி பொருத்தமான பழமொழிகளும் உவமைகளும் வர்ணிப்பும் இந்நாவலை இலக்கியத் தரமாக்குவதோடு, வாசிப்பவர்களை அக் கால கட்டத்திற்குள் இழுத்தும் செல்கின்றது. குறுகிய எல்லைகளை உடைத்தெறிந்து வரலாற்று நாவல்களின் தளத்தை வேல்
    விழியாள் மறவன் என்ற நாவல் பெரிதாக்கிவிட்டது.
    இவ் நூலின் முன்னுரையில் “தயவு செய்து இந்தக் கதையை தற்காலத்து அரசியலுக்குள் கலக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.” என்று ஆசிரியை குறிப்பிட்டாலும் தற்கால ஈழத்து அரசியலுடன் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும். ஒப்பிடுவதைத் தவிர்க்க முடியவில்லை.
    இந் நாவல் ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் வாசிக்க வேண்டும். மிகச் சிறந்த ஈழத்துடன் தொடர்புள்ள வரலாற்று நாவலை எழுதிய பெண் எழுத்தாளர் சிவநயனி முகுந்தன் அவர்கள் மேலும் பல ஆக்கங்களைப் படைப்பதற்கு இந்நாவல் உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களிடையே குறிப்பாக ஈழத்தமிழர்களிடையே சென்றடைய வேண்டும்.
    ஈழத்தமிழர் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் இந் நூல் வெளியிடப் படுவதுடன் தமிழ் நாட்டிலும் வெளியிடப்படவேண்டியது அவசியமாகும். இந் நூல் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே மூச்சில் படித்து முடித்து விட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வகையில் விறுவிறுப்பாக அமைந்து இருப்பதே இந் நாவலின் வெற்றிக்கு எடுத்துக் காட்டாகும். இவ் நாவல் புலம்பெயர்ந்த நாட்டில் எழுந்த முதல் தமிழ்
    சரித்திர நாவல் என்கிற பெருமையைப் பெற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாது, ஆசிரியை ஈழத்தின் முதல் தமிழ்ப் பெண் வரலாற்று நாவலாசிரியை என்கிற பெருமையையும் தட்டிச் சென்றுள்ளார். அவருக்கு எமது வாழ்த்தும் பாராட்டும் உரித்தாகட்டும்.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters