அன்புள்ள நண்பர்களே, பல்லாயிரம் தமிழ் மக்களை மந்திரம் போல் கட்டி வைத்த நாவல் சிவகாமியின் சபதம். சுமார் ஐந்து ஆண்டுகள் தொடர்கதையாக வந்து , வாசகர்களை ஏங்க வைத்து பித்தம் கொள்ள வாய்த்த தொடர். நாவல்களில் - ஆசிரியரின் கற்பனைக்கு பெரும் சுதந்திரம் உண்டு , இயற்கை வர்ணனை, உணர்சிகளின் வர்ணனை , பாத்திரங்களின் கற்பனை , ஆசிரியர் கூற்று , எனவும் மேலும் நினைத்த இடத்தில நிறுத்தி மறு வாரம் வரை வாசகரின் கற்பனையை தூண்டிவிட்டு வேடிக்கையும் பார்க்கலாம் . ஆயிரம் பக்கங்களை கொண்ட நாவலை இரண்டு மணி நேர சினிமா அல்லது நாடகமாக மாற்றுவது என்பது பெரும் அசுர சாதனை.. அதிலும் ,பிரசித்தி பெற்ற நாவலை மாற்ற முற்படுவது கம்பி மேல் நடப்பது போன்றதாகும் ..பாத்திரங்களின் எண்ணிக்கை - நிகழ்வுகள் என பலவற்றையும் குறைத்து - அதே பொழுது சுவாரசியத்தை தக்க வைப்பது ஒரு செப்பிடு வித்தை. பெங்களூரில் - சிவகாமியின் சபதம் - நாட்டிய நாடக வடிவில் அரங்கேறியது . நாவலைப் படிக்காதவர்கள் கூட எளிதில் கதையை கதையை புரிந்து கொள்ளும்படி , ஒவ்வொரு காட்சிக்கும் முன்னர் கதை விளக்கப் பட்டது , ஆயினும் , நாவலைப் படித்தவர்களுக்கு பெருத்த இடைவெளியை உணரமுடிந்தது ... நாகநந்தி அடிகள் - நரசிம்மபல்லவன் - மகேந்திரர் மற்றும் வஜ்ராபாகு - ஆயனர் - புலிகேசி - திருநாவுக்கரசர் என சுமார் பத்து பாத்திரங்கள் மேடையில் உலவின .. நொடிக்கு நொடி முக பாவங்களை மாற்றி - சிட்டென பறப்பது ஒரு தருணம் - சோகத்தில் அமிழ்வது மறு தருணம் - மானின் துள்ளல் ஒரு க்ஷணம் - சிங்காரியின் சிருங்கார பாவம் ஒரு க்ஷணம் -கொற்றவையின் கோபம் மறு க்ஷணம் - இறைவன் மீது பக்தி வெள்ளம் ஒரு பொழுது - புலிகேசியை கண்டதும் அங்கமெங்கும் பயம் மறுபொழுது என சிவகாமியாக உருவெடுத்து - தனது நாட்டியத்தால் -இரண்டு மணி நேரமும் பார்வையாளர்களை கட்டிப் போட்டிருந்தார் ஒரு இளம் பெண் ...."முன்னம் அவர்தம் நாமம் கேட்டாள் ..மூர்த்தி அவர் இருக்கும் வண்ணம் கேட்டாள் "...என்ற பாடலுக்கு அபிநயம் அற்புதம் ... முடிவில் ஒட்டு மொத்த அரங்கமும் எழுந்து நின்று கரகோஷம் செய்து அங்கீகரித்தது இவரது நாட்டியத்தை. நாட்டியத்தின் அடவுகள் - ஜதி - முத்திரை - பாவம் என எதுவுமே தெரியாத என் போன்றோரைக் கூட மெய் மறக்க செய்த நாட்டிய நாடகம். மேடையில் " செட்" - அரங்க அமைப்பு என்பதே இல்லாமல் - " கணினி" மூலம் - திரையில் பின்னணி மற்றும் பாடல் -இசை ஆகியன உருவாக்கி - நடத்தியது நாடகம் எப்படி விஞ்ஞானத்தின் பிடிக்குள் அடங்கியிருப்பதை காட்டிற்று ....... வாத்திய கோஷ்டி இன்றி , பின்னணிக்கு நடனம் - தாளம் தவறாது ஆடியது - பலரது உழைப்பையும் ஒருங்கிணைப்பையும் காட்டியது.... சென்னையில் சென்ற மாதம் இந்நிகழ்ச்சி நடந்ததாம் .. எத்தனை நண்பர்கள் பார்த்தார்களோ தெரியாது. மறுமுறை - இந்நிகழ்ச்சி உங்களது ஊரில் நடை பெற்றால் தவறாது பார்க்கவும். அன்புடன் கதிரவ்ன்