Today's Dinamani ( Chennai Edition) and Deccan Chronicle have reported of Buddha Statue (with picture) Found by Dr. Kudavayil Balasubramanian in Tiruvarur district ..
திருவாரூர், ஜூலை 24: திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே கி.பி. 10-ம் நூற்றாண்டு புத்தர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் கண்டிரமாணிக்கம் என்னும் ஊரில் இரண்டு நாள்களுக்கு முன் மேட்டுத் தெருவில் உள்ள மணிகண்டன் என்பவர் வீட்டுக்கொல்லையில் பள்ளம் தோண்டும்போது ஒரு பெரிய புத்தர் சிலை புதைந்து இருந்தது கண்டெடுக்கப்பட்டது. அந்த புத்தர் சிலையை டாக்டர் குடவாயில் பாலசுப்பிரமணியன், தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளர் டாக்டர் ஜம்புலிங்கம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சிலை குறித்து ஆய்வாளர்கள் கூறுவது, இந்தச் சிலை கி.பி.10-11ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர் காலச் சிற்பமாகும். இது அவ்வூரில் இருந்த பெüத்தப் பள்ளியில் வழிபாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 63 அங்குல உயரமும், 33 அங்குல அகலமும் உள்ள இச்சிற்பம் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. புன்னகை தவழும் இதழ்கள், நெற்றியில் திலகக்குறி, நீண்டு வளர்ந்த காதுகள், பரந்த மார்பில் காணப்படும் மேலாடை, இடுப்பில் ஆடை ஆகியவை சிற்பத்திற்கு அழகைத் தருகின்றன. வானோக்கி உள்ள வலது கையில் தர்ம சக்கரக்குறி காணப்படுகிறது. தலையில் சுருள்முடிக்கு மேல் தீச்சுடர் உள்ளது. மூக்கு சிதைந்த நிலையில் உள்ளது. இச்சிற்பம் ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் காணப்படுகின்ற 66-வது புத்தர் சிற்பமாகும். கண்டிரமாணிக்கத்தில் சோழர் கால சிவன் கோயிலும், திருமால் கோயிலும் இன்றும் உள்ளன. கி.பி.1700-ம் ஆண்டு காலக் கட்டத்தில் தஞ்சாவூர் மராட்டிய மன்னர் சகசியின் அவையில் இருந்த சமஸ்கிருதப் பேரறிஞர் ராமபத்திர தீட்சிதர் இவ்வூரைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மாமன்னன் ராஜராஜன் நாகப்பட்டினத்தில் இருந்த புத்த விகாரத்திற்கு நிலதானம் அளித்தபோது அந்தச் சாசனத்தில் கையொப்பமிட்ட ஒருவரான ஸ்ரீதரபட்டன் என்பவர் கண்டிரமாணிக்கத்தை அடுத்த சீதக்கமங்கலத்தை (ஸ்ரீதுங்கமங்கலம்) சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. http://www.poetryinstone.in “*Here the language of stone surpasses the language of man*” – Nobel laureate, Rabindranath Tagore