• ----- Forwarded Message -----
  From: Gopalan Venkataraman
  To: Themozhi
  Sent: Monday, February 11, 2013 11:11 PM
  Subject: Re: ஓவியங்கள்


  திருவையாறு பாரதி இயக்கம்,
  19, வடக்கு வீதி, திருவையாறு.

  அறிக்கை

  தஞ்சை மாவட்டத்தில் காவிரிக் கரையில் அமைந்திருக்கும் திருத்தலம் திருவையாறு. இங்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அறம்வளர்த்தநாயகி உடனாய ஐயாறப்பர் ஆலயம் இருக்கிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்தக் கோயில் கல்லணை கட்டிய கரிகால் பெருவளத்தான் காலத்தில் எழுப்பப்பட்டதாகத் திருத்தல வரலாற்றிலிருந்து தெரியவருகிறது. கரிகாலன் தேரில் வந்து
  கொண்டிருந்த போது வனப்பகுதியாக இருந்த ஓரிடத்தில் அவன் தேர் கீழிறங்கியதாகவும், அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது பூமிக்கடியில் அகப்பேய் சித்தர் நிஷ்டையில் இருந்ததாகவும், அவருடைய தவம் கலைந்ததால் என்ன செய்வாரோ என்று பயந்திருந்த மன்னனிடம் அவ்விடத்தை மேலும் தோண்டி அங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு ஓர் ஆலயம் அமைக்கப் பணித்ததாகவும், அதுதான் இந்த ஆலயம்
  என்பதும் தெரிய வருகிறது. இந்த ஆலயத்தை கூர்ந்து கவனித்து வருகையில் தெரியவரும் உண்மை என்னவெனில் ஐயாறப்பர் எழுந்தருளியிருக்கும் மூலத்தானமும் அதன் மேல் அமைந்த விமானமும்தான் ஆதிகாலத்தியது என்பதும் அந்த மூலத்தானத்தைச் சுற்றியுள்ள மற்ற பகுதிகள் எல்லாம் பிற்காலத்தில் ஒவ்வொரு மன்னர்கள் எழுப்பியது என்பதும் தெரியவருகிறது.

  இந்த ஆலயத்துக்கு 1971ஆம் ஆண்டு திருக்கயிலாய பரம்பரை திருத்தருமையாதீனத்தார் குடமுழுக்குச் செய்வித்திருக்கின்றனர். அதன் பின் இப்போது வருகிற தை மாதத்தில் குடமுழுக்கு செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வேலைகள் துரித கதியில் நடக்கின்றன. மூலத்தான விமானத்தையொட்டி அமைந்த மேற்கூரையின் மேல் தளம் முழுவதும் புதிய தட்டோடுகள் பதிக்கப்பட்டு
  புதுப்பிக்கப்பட்டு விட்டன. மேல் மாடம் செல்ல படிகள் இருக்கின்றன. அதன் வழியாக மேல் கூரைக்குச் சென்று தளங்களையும் மூலத்தான விமானம் மற்றும் மற்ற விமானங்களைப் பார்க்கும்போது மூலத்தானத்து மேற்புறம் அமைந்துள்ள விமானம் முழுவதிலும் பல சித்தர்களின் உயிரோட்டமுள்ள சுதைச் சிற்பங்கள் இருப்பதைக் காண முடிகிறது. பொதுவாக தெய்வ விக்கிரகங்கள் மட்டுமே இருக்கக்கூடிய
  விமானங்கள் எங்கும் இருக்கும். ஆனால், இங்குள்ள விமானம் முழுவதும் பல சித்தர்கள், பல வடிவங்களில் தவக்கோலத்தில் இருக்கிறார்கள். அந்தச் சிற்பங்கள் நேரில் பார்ப்பதைப் போல மிக துல்லியமாக, அழகாக, அளவெடுத்தாற்போல உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்த விமானம் சிறு செங்கற்களாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்டு சுதைவேலைப்பாடுகள் நிறைந்து காணப்படுகின்றன. சுற்றிலுமுள்ள
  மண்டபங்கள் அனைத்திலும் கருங்கற்கள் பயன்பட்டிருந்தாலும் இந்த கோபுரத்தில் மட்டும் சுண்ணாம்பு சுதை வேலைப்பாடுகளோடு, எண்ணற்ற சிறிய பெரிய சித்தர்கள் உருவம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த கர்ப்பகிரகத்தைச் சுற்றியுள்ள ஒரு சுற்றுப்பிரகாரத்தில் அமைந்துள்ள தக்ஷிணாமூர்த்தி சந்நிதி வரை மட்டும் செல்லலாம். அதனைத் தாண்டி செல்ல அனுமதி இல்லை. காரணம் அங்கெல்லாம்
  சிவனின் சடாமுடி பரந்து விரிந்து கிடக்கும் பகுதி என்கிறார்கள். இனி விஷயத்துக்கு வருவோம்.

  இந்த பழமையான ஆலயத்துக்கு குடமுழுக்கு செய்வதற்காக ஆலயத்தில் பல திருப்பணிகள் பல உபயதாரர்களின் உதவியோடு நடந்து கொண்டிருக்கின்றன. ராஜகோபுரம், மேல கோபுரம், போன்ற பெரிய கோபுரங்களும், ஆட்கொண்டார் எழுந்தருளியிருக்கும் தெற்கு கோபுர வாசல் முதலிய இடங்களும் புனருத்தாரணம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தென் கயிலாயம் எனும் திருநாவுக்கரசர் சந்நிதி அமைந்த ஆலயம்
  ஏற்கனவே புதுப்பிக்கப்பட்டு விட்டது. ஆலயத்தின் உட்புறம் எண்ணெய் பிசுக்கும், வண்ணக் கலவைகளும் மூடியிருந்த திருவோலக்க மண்டபம் உட்பட அனைத்துத் தூண்களும் சுத்தம் செய்யப்பட்டு அதற்கு மேல் ரசாயனப் பூச்சு மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தூண்களில் எண்ணெயைய் தடவுவது, சிற்பங்களை சிதிலம் செய்வது போன்ற பல தீய பழக்கங்களால் இவை சீர்கேடு அடைந்திருந்தது. அவை இப்போது சரி
  செய்யப் படுகின்றன.

  இந்த நிலையில் சமீபத்தில் சில பத்திரிகைகளிலும், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் இந்த ஆலயத்தில் மூன்றாம் உள்நிலை பிரகாரத்தில் முச்சத்தி சந்நிதி, முருகன் சந்நிதி, நவக்கிரகம், ஆதி விநாயகர் ஆகியவை அடங்கிய பிரகாரத்தில் தென்புறகுள்ள திருச்சுற்று மாளிகையின் சுவற்றில் 1958ஆம் வருஷம் தல புராணம் முதலியவை வண்ணக் கலவையால் படங்களாகத் தீட்டப்பட்டிருக்கிறது. அது
  இப்போது அழிந்து வண்ணம் மங்கி, உருத்தெரியாமல் போய்விட்டபடியால் இப்போது அங்கு புதிதாக வண்ணம் தீட்டும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த திருச்சுற்று மாளிகை கீழ் புறம் தவிர மற்ற தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று பகுதிகளிலும் மேல் மாடத்தோடு அமைந்திருக்கிறது. கீழ் திருச்சுற்றில் நடப்பதைப் போலவே படியேறி மேல் சுற்றிலும் நடந்து பார்க்கலாம். அப்படி கீழ்
  சுற்றில் தெற்குப் பகுதியில் மட்டும்தான் 1958இல் தீட்டப்பட்ட சித்திரங்கள் காணப்படுகின்றன. மற்ற பகுதிகள் கீழ் சுற்று, மேல் சுற்று உட்பட மேற்குப் புறம், வடக்கு புற சுவர்கள் அனைத்தும் கருங்கற்கள் அடுக்கப்பட்டுக் கட்டப்பட்டிருக்கின்றனவே தவிர அதில் எந்த சித்திரங்களும் இல்லை.

  இந்த 1958இல் தீட்டிய சித்திரம் அழிந்துவிட்டதால் அதன் மீது புதிதாக வண்ணம் தீட்டப்படுகிறது. இதை சில பத்திரிகையினர், யார் கொடுத்த விவரங்களோ தெரியவில்லை, இங்கு சோழர் கால சித்திரங்கள் அழிக்கப்பட்டு புதிதாக வண்ணம் தீட்டுவதாக எழுதி கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். அங்கு சோழர் கால சித்திரங்கள் இருந்திருந்தால் தொல்பொருள் ஆய்வாளர்களுக்கும், கல்வெட்டு
  ஆராய்ச்சியாளர்களுக்கும் தெரியாமல் போயிருக்குமா? மேலும் இந்த ஆலயம் பழமையானது என்பது தவிர எந்த மன்னனின் தலை நகரத்திலும் அமைந்திருக்கவில்லை. இங்கு சோழர்காலஓவியங்கள் மட்டுமல்ல, பின்னர் வந்த நாயக்கர்கள், மராத்தியர்கள் கால ஓவியங்களும் காணக் கிடைக்கவில்லை.

  இந்த பிரகாரத்தில் நவக்கிரக மண்டபத்துக்கு முன்பாக விக்கிரகங்கள் பாதுகாக்க ஒரு மண்டபத்துக்குச் சுற்றுச் சுவர் எழுப்பி பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. அந்த மண்டபத்தில் இருந்த சுவர்களை இப்போது இடித்துவிட்டு கனமான கிரில் பாதுகாப்பு செய்யப்படுகிறது. அந்த மண்டபத்தின் மேல் பகுதியிலும் இதுபோன்ற சமீப கால வண்ண ஓவியங்கள் அப்படியே இருக்கின்றன. அதே மாதிரியான
  ஓவியங்கள்தான் தெற்குப் பகுதி திருச்சுற்று மாளிகையிலும் வரையப்பட்டிருக்கிறது. மேலேயுள்ள இந்த சித்திரங்களைச் சுரண்டிப் பார்த்தால் அடியில் வேறு பழமையான சோழர் கால ஓவியங்கள் இருக்கிறதா என்பதையும் கண்டுபிடித்து விடமுடியும். தஞ்சை பெரிய கோயிலின் விமானத்தில் மேல் தளத்தில் அப்படிப்பட்ட சோழர் கால ஓவியங்களும், அதன் மீது வரையப்பட்ட நாயக்கர் கால ஓவியங்களும்
  கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. அப்படியெல்லாம் எந்த தகவலும் இல்லாமல் இங்கு நடைபெறும் திருப்பணி வேலைக்கு இடையூறு செய்வது போல சிலர் தவறான செய்திகளைப் பரப்பி வருவதற்கு பதிலாக இந்தத் துறையில் வல்லுனர்கள் சிலரை அழைத்து வந்து காட்டி உண்மையை வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.

  எனவே அதுபோன்ற தவறான செய்திகளைப் பரப்பி மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தாமல் ஆலய திருப்பணி நல்ல முறையில் நடைபெற அனைத்துத் தரப்பினரும் ஒருமுகமாக பாடுபடவேண்டும். இந்த புகார்கள் வெளிவந்ததால் கடந்து 35 ஆண்டுகளுக்கும் மேலாக இறை பணியும், சமூக பணிகளும், ஆலயத்தில் நாட்டியாஞ்சலி, ஆடி அமாவாசை கைலை காட்சி காணுதல், சித்திரைத் திருவிழா போன்றவற்றில் தீவிரமாக
  பங்குபெற்று வரும் திருவையாறு பாரதி இயக்கத்தின் சார்பில் பொறுப்பாளர்கள் சென்று ஆலயத்தை நன்கு ஆய்வு செய்த பிறகே இந்த உண்மை நிலையை வெளிக் கொணருகிறோம். இது குறித்து மேலும் உண்மை நிலைமையை அறிந்து கொள்ள விரும்புவோர் திருத்தருமையாதீனம் திருவையாறு கட்டளை விசாரணை முனைவர் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகளைக் கண்டு பேசி தெளிவு பெறலாம் என்றும் தெரிவித்துக்
  கொள்கிறோம். நன்றி.

  திருவையாறு
  8-4-2012 தலைவர், திருவையாறு பாரதி இயக்கம்.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters