You are herePonniyin Selvan Varalaatru Peruvizha Souvenir 2009 / பொ. செ. பா - ஜெ. சந்திரசேகரன்

பொ. செ. பா - ஜெ. சந்திரசேகரன்


By humble - Posted on 24 February 2010

பொ. செ. பா

ஜெ. சந்திரசேகரன்

‘பொ. செ. பா’ - எதோ கட்சிப்பெயர் மாதிரி இருக்குதேன்னு பார்க்கறீங்களா? இல்லங்க, அதுல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுங்க! இது பொன்னியின் செல்வனால் பாதிக்கப்பட்ட ஜென்மங்கள் பற்றிய பதிவுங்க! அட, சும்மா கெடந்த சங்க ஊதிக் கெடுத்தான் ஆண்டிங்கற மாதிரி, ஏதோ சும்மா இருந்த எனனை உசுப்பி விட்டு வேடிக்க பார்க்குற ஒரு வெறிபிடிச்ச கும்பல் இருக்குய்யா..! 2005 வருஷம், அக்காவுக்குத் துணை போற சாக்குல ராத்திரியோட ராத்திரியா மெம்பர் ஆகி, எதோ குழுமத்துல இழுத்துவிடுறேன்னு இதுல கூட்டிகிட்டு போயி, வீராணம் ஏரியிலேர்ந்து, கோடியக்கரை வரைக்கும் போகணும்னு ஒரு குரூப்பா கிளம்பினோம். பெரிய வந்தியத் தேவன்னு நினைப்பு. பல தொந்தியத் தேவன் அதுல வந்தாங்க! அவனைப் போலவே சாப்பிடற நேரம் போக மிச்ச ‘தீவிரவாதி’ ங்கல்லாம் சேர்ந்து ரவுண்டு கட்டி, மெய்கீர்த்தி, கல்வெட்டு, மழபாடி, செப்பேடுன்னு ஏதேதோ பேசிகிட்டு வந்தாங்க. சுத்தமா புரியல. எனக்கு கல்கண்டு, நெய்தோசை, வாழைப்பழம், மதிய சாப்பாடுன்னுதான் நினைப்பு. கொஞ்சம்போல படங்கள் வரைவேன். அப்பப்ப படங்கள் எடுப்பேன். கொஞ்சம் சிலைங்க, ஓவியம்னு பார்த்தால், அங்கேயே ஆக்கர் அடிச்சுடுவேன். இந்த டூர் போனதுல, ஊரச் சுத்தி உலகச் சுத்தி கடைசில பெரிய கோவிலை நெஜம்மா புரியிறபடி காமிச்சாங்க. மகாமேரு போல தக்ஷிண மேருவா தஞ்சைக் கோவில உருவகப்படுத்தி ராஜ ராஜன் கட்டினாங்கறத வருணிச்சுகிட்டே குடவாயில் பாலு சொல்லச் சொல்ல, என்வாயில் எது போச்சுன்னு தெரியாம ¢ வாயப்பொளந்துகிட்டு கேட்டுகிட்டே இருந்தேன்.

வர்ற வழியில புள்ளமங்கைங்கிற ஒருகுட்டிக் கோவில். பாடல் பெற்ற ஸ்தலம். நாங்க போன நேரம், மதியம். ஆளுங்களும் ஆடுகளும் படுத்துக்கிட்டு, வாசல மறிச்சு கிடந்தாங்க. ஆளுக்கு சொல்லி அனுப்பிதான் கோவிலத் தெறக்க வெச்சோம். அங்கிருக்கிற மினியேச்சர் சிற்பங்க எத்தன ஊரச் சுத்தினாலும் பார்க்கக் கிடைக்காது. ‘காமிறா காமிறா’ன்னு கண்ணுகட்டி சொர்க்கத்துல விட்டத, நானும் காமிராக்குள்ள வளச்சு வளச்சு படம் பிடிச்சேன். வழில சும்மா தேவர் மகன் வீடு கணக்கா உள்ள 'பெரிய எடத்து’ வீட்டுல, நம்ம க்ரூப் ஆர்வக் கோளாறு பார்ட்டிங்க, ஊஞ்சல் ஆடினாங்க. அந்த வீட்டு பெரிய மனுஷன் விட்ட லுக்ல, ‘டேய், எங்க பொண்ணோட ஏதோ சரித்திரம் படிக்க கூட வந்தேங்களோ, பொழைச்சீங்க. இல்ல, ...” ங்கிற பார்வை இருந்தது. பசங்க மெதுவா பம்மிட்டாங்க! மழையும் பிடிச்சுகிட்டதுல, கோடிக்கரை ப்ளான் கட், மீண்டும் சென்னைப் பயணம்.

என் கண்ணுல என்னவோ, வழியெல்லாம், கண்ணுல சுண்ணாம்பு பட்டாப்புல அஞ்சு கிலோமீட்டருக்கு ஒரு பாழடைந்த கோயில் கண்ணுல பட்டுகிட்டே இருந்துச்சு!
'அட, இதெல்லாம்..?’

‘ஆமா, தஞ்சை, கும்பகோணம் பக்கத்துல கோயிலுக்கா பஞ்சம்? லட்சக் கணக்குல இருக்கு, ஆனா 90 சதவிகிதம், பாழடைஞ்சதுதான்' னாரு எஸ்.பி.எஸ்!
மனசுல அது எதோ பண்ணிருச்சு.

என்னை இதுக்குள்ள இழுத்து விட்ட மகராசி எங்க அக்கா உமா இப்ப எஸ்கேப்! வேதாளம் பிடிச்ச விக்கிரமாத்தித்தன் கதையா நம்மள இப்ப இது கட்டிப்போட்டுடுச்சு.

எதோ கதையப் படிச்சோமா, மடிச்சு தலைக்கடில வெச்சு படுத்தோமான்னு இல்லாம, வரலாற பொரட்டிப் போடுற அந்த கும்பல் கிட்ட மாட்டிகிட்டுதான் இப்ப தினமும் பழைய கல் (கள் இல்ல) தேடிப் போற பிசாசா அலைய வெச்சுட்டாங்க!

சரி, என்னதான் செய்யறது? இருக்குற இடிஞ்ச கோயில்களை சுத்தம் பண்ணி அட்லீ¦ஸ்ட் சாமி கும்பிடற மாதிரி பண்ணலாமே?

பண்ணோம். இன்னொரு கும்பல் யாஹ¨ல உருவாச்சு. temple_cleaners. மாசம் ஒரு கோயில், ஞாயிற்றுக்கிழமைங்கள்ல. வந்தாங்க. முக்கால்வாசி பேர் ஐ.டி. ஆளுங்க. அதான் பசப் பார்ட்டிங்க! கம்ப்யூட்டர் துறை. கீபோர்ட்டு பிடிச்ச கையால, கடப்பாறை பிடிச்சா?

இவரு நாலு மணி நேரத்துல நூறு சதுரடி சுத்தம் பண்ணா, ஊர்கார விவசாயி, சும்மா ஒரு ஏக்கர் சுத்தம் பண்ணிபுட்டான்! நம்மாளோ, ஞாயிற்றுக் கிழமை மண்வெட்டி பிடிச்சுட்டு, அடுத்த நாலு நாள் முதுகுப் பிடிச்சுகிடுச்சுன்னு மட்டம் போட்டான்! ! உஹ§ம், இது சரிப்படாதுன்னு ஐடியாவை மாத்தினேன். நீ கூலிப் பணத்த குடு. ஊர்காரனையே வெச்சு சுத்தம் பண்ணலாம்னு பண்ணி, அது கொஞ்ச நாள் ஓடிச்சு. ஒரு முறை அப்படி சுத்தம் பண்ண கோயிலைப் பார்க்கலாம்னு ஆசையாப் போனா, மண்டபத்துல அழகா சீட்டு ஆடிகிட்டு, தண்ணி அடிச்சுகிட்டு இருந்தான்!

அப்பதான் தெரிஞ்சது. ஊர் அருமையும், கோயில் அருமையும் தெரிஞ்சு, மதிச்சு வர்ற ஊர்காரனத்தான் நாம மதிச்சு போகணும், மிச்ச கோயிலெல்லாம் சுத்தம் பண்ணா, அது சாராய மடமா போகும்னு!

நல்ல வேளைல, நாலு பெரிய மனுஷங்க நம்ம க்ரூப்ல சேரறபோது, தொல்லியலேர்ந்து ரிடையர் ஆகி, டாக்டர். சத்தியமூர்த்தி சார், எங்க கிட்ட மாட்டிகிட்டாரு. ரொம்ப பொறுமைசாலி அவர். கேனத்தனமா நாங்க கேக்குற கேள்விக்கெல்லாம் அமைதியா பதில் சொல்லி, 'சரித்திரத் தேர்ச்சி கொள்'னு பெரியவங்க சொன்ன வாக்குக்கு ஏற்ப, எங்களை கொஞ்சம் கொஞ்சமா, 'சரி' பண்ணாரு.
அவர் தலைமைல REACH FOUNDATION உருவாச்சு! Rural Education And Conservation of Heritage என்பதின் சுருக்கம் ரீச். மக்களை ரீச் ஆகணும்ல?

மெதுவா, கோயில் கட்டறதுக்கு தொழில்நுட்பம், அந்தந்த ஊர்ல, உழவாரப் பணி செய்யிற அன்பர்களுக்கான புராதனக் கோயில்களை காப்பது எப்படீன்னு விளக்குற முகாம், அப்புறம், கல்வெட்டு, கோயில் கட்டிடக் கலை, இதெல்லாம் சொல்லி கொடுக்க ஆசை ஆசையா சிவபாதசேகரனா தன் பேரை சொல்லிக்கிற எஸ். பி. சார் வெச்ச பேருல (Academy of Archeology and Sciences of Ancient India) - AASAI ஆரம்பம்!

ஞாயிற்றுக் கிழமையானா கேமராவும் நோட்டுமா, பழைய கோவில்களை ஆவணப் படுத்தக் கிளம்பிடுவோம். சுமார் 200 கோயில் இப்படி நம்ம லிஸ்ட்ல! எத்தன ஆயிரம் பேர் வேணும், அத்தனையும் எடுத்துக் கட்டுறதுக்கு?

ஒருத்தன் கேட்டான். கோவில் கோவிலாத் திரியறயே, திருவண்ணாமலை பார்த்திருக்கயா?
‘இல்லை'
நெல்லையப்பர் கோவில் பார்த்திருக்கயா?
‘இல்லை'
பின்ன என்னத்த உருப்படியா பார்த்த?

அப்பா, அததுக்கு குடுப்பினைன்னு ஆண்டவன் அளந்து வெச்சிருக்கான். எனக்குன்னு எழுதி வெச்சது பழைய கோவிலுங்க, இடிஞ்ச கோவிலுங்கதான்' னேன்!
'ஒரு மார்க்கமா' என்ன பார்த்து, “இடிஞ்ச சிவன் கோவிலுக்குப் போனா பூத கணங்கள் பிடிச்சுடுமாமே, அங்க எதுக்கு போற மாமே?' ன்னான்.
‘அட, அழகா பூதரேகை வரிசையில், கை தட்டி, கொக்கரிச்சு, பழிப்புகாட்டி போஸ் கொடுக்குற பூதங்களா என்ன சாப்பிடப் போகுது? அடப்போய்யா!

‘என்னது,பூத ரேகையா?' அப்படி ஒரு ஸ்வீட் ஐயிட்டம் ஆந்திராவுலதான் குடுப்பாங்க; கோயில்லயும் பூதரேகையிருக்கா' ன்னான்.

வா காட்டறேன்.

‘குமுதம், கபோலம், ஏகதளம், த்விதளம்.....' நான் சொல்ல சொல்ல, கேள்வி கேட்ட நண்பன், எஸ்கேப்!

இப்படி ரொம்ம்ம்ப டெக்னிகலா பேசற அளவுக்குக் கெட்டுப்போயிட்டேன்!

மேலும் மேலும் இதுல ரொம்ப பெரிய மனுஷங்களான நாகசாமி, ராமச்சந்திரன், ஸ்ரீராமன், சுப்ரமணியம் சுவாமிநாதன், டாக்டர் சித்ரா மாதவன்னு பல பேர் வாழ்க்கைல குறுக்கிட்டு, என்னைய ரொம்ப கெடுத்து வெச்சுட்டாங்க. நாம கெட்டா போதாதுன்னு, ஒரு ஊரையே கெடுத்துகிட்டு இருக்கேன்! இப்ப கை கொடுக்கும் கையா நடராஜன், சுந்தர், சந்துரு, கோபால், இப்படி பல சரித்திர, கோயில் பிரியர்கள், ரீச் பல தரப்பட்ட மக்களை ரீச் பண்ண வெக்கிறாங்க!

அதுல பல அனுபவங்கள்! சேரில கோயில் கட்டின பெரியவர் வான்னு சொல்லி அங்கே கூட்டிகிட்டு போனார். ஊர்காரங்க தயங்கித் தயங்கி பேசுனாங்க! என்னன்னு விசாரிச்சா, ‘சாமி நாங்க தந்தா, டீ சாப்பிடுவாரா?' ன்னு ஒரு கிழவி கேட்டுச்சு.
‘பாட்டி நீங்க நல்ல டீ போடுவீங்களா, போட்டா நான் குடிக்கிறேன’¢னு சொன்னேன். பாட்டிக்கு ஒரே சந்தோஷம். டீ எப்படியோ, அவங்க மனசு பாலு!

சாயங்காலம் ஊர் திரும்பறப்போ, ‘சரி, கோயில் கும்பாபிஷேகத்தை உங்க ஊர் பெரியவங்க யாரையாச்சும் வெச்சு செஞ்சிடுங்கன்னு' என் கூட வந்த பெரியவர் சொன்னார். அவங்க கையால கலசத்துல் நீர் ஊற்றினா, அவங்களுக்கு ஒரு பிடிப்பு உண்டாகும்னு!

‘அதெப்படி? நீங்கல்லாம், ஹோமம் வெச்சு, மந்திரம் சொல்லி ஐயரை அழைச்சு செய்வீங்க? எங்க கோயில்னா நாங்களே செஞ்சிக்கிடணுமா' னு எதிரும் புதிருமா ப்ளேட்டை திருப்பி போட்டாங்க!

சேரின்னதும் பல மாம்பலம் வைதீகர்கள் பின் வாங்கினாங்க. ரொம்ப ‘அழுத்தி' ஒருத்தரை ரெடி பண்ணி கூட அழைச்சுகிட்டு போனோம். மனசே இல்லாம, அரைகுறை மந்திரமுணுமுணுப்போடு, ஹோமம் முடிஞ்சது. கலசங்களுக்கு அந்த ஊர் பெரியவர்களோடு, ஐயரும் சேர்ந்து நீர் ஊற்றினார். இருவருக்கும் ஒரே மாதிரியான பட்டுத் துணி தலையில் சுற்றி பரிவட்டம் கட்டப்பட்டது. அவர்களுக்கு ஒரே சந்தோஷம், பெருமை. ஐயர்தான் ‘கொஞ்சம்' பல்ஸ் டவுன் போல் முகவாட்டமாயிருந்தார்.

ராத்திரி கிளம்பறப்ப, ஜீப் பின்பக்கமெல்லாம், கல்லைக் கட்டி விட்ட மாதிரி கெனம்! என்னன்¢னு பார்த்தா, மூட்டைகளில் காய்கறிகள்!

‘நாங்கதான் சாமி வெச்சோம். உங்களுக்கு, ஐயருக்கு.. எதோ எங்களால முடிஞ்சது' என்று அன்பாய் சிரிச்சு சேரி ஜனங்க வழியனுப்பினாங்க! வழியெல்லாம், ஐயர் மவுனமாய் வந்தார். இறங்குகையில், மூட்டைகள் எல்லாவற்றையும் அவரிடமே தர, அவர் நா தழுதழுக்க, “எனக்கு பெரிய ஐ ஓபனர்! கண்ணு தெறந்தேள். அவா பாசத்துக்கு முன்ன நாம பண்ண பூசை புனஸ்காரம் எல்லாம் மண்ணுன்னு ஆயிடுத்து. சார், அடுத்த தடவ எங்க கும்பாபிஷேகம்னாலும் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லுங்கோ, ஓடி வந்துடறேன்'னார்!

நாங்க சுண்ணாம்பை வெச்சு கட்டு, கல்லை வெச்சு கட்டுன்னு எல்லா இடத்துலயும் சொல்வோம். சிமிண்ட், பெயிண்ட் இதெல்லாம் எங்கள் அகராதியில் கிடையாது. இன்னொரு ஊர்ல கஷ்டப்பட்டு அஞ்சு வருஷம் முன்னாடி சிமிண்டால கட்டின விமானமே இடிஞ்சு விழுந்து பாணம் பிளந்து, சிவலிங்கமே உடைஞ்சி போச்சு!

வேற ஒரு ஊர்ல, நல்ல புராதனமான ஐம்பொன் சிலைய வித்து (அதன் மதிப்பு தெரியாம) அந்த காசுல கோவிலை கட்டியிருக்கான்! சாமியை வித்துக் கோவில்! எப்படி? இன்னும் பல அனுபவங்கள் சொல்லிகிட்டே போகலாம்.

தாங்கி பிள்ளையார் கோவிலைக் கட்டி பிள்ளையார் சுழி போட்டு, இன்னிக்கு குழையூர் சிவன் கோயில், அதை ஒட்டுன மண்டபம், அப்புறம் உத்தரமேரூர் கைலாசநாதர் கோவில்னு கோயில்களை எடுத்துக் கட்ட ஆரம்பிச்சுட்டோம். முதல் ரெண்டு முடிஞ்சாச்சு. ஒரு ஆறு லட்சம் ‘துண்டு’ விழுற உத்தரமேரூர் கோயில், பொ.செ.வ. பே வை நம்பி முடிய காத்திருக்கு! (இதுவும் கட்சி பேரு மாதிரி இருக்கா? நம்ம கோஷ்டிதான்.. பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை). மக்களே, அள்ளிக் கொடுங்க. கோவிலை முடிப்போம். உங்க தாத்தன் பாட்டன் அப்பன் சொந்த ஊருகளுக்கு பையனுக்கு மொட்டை போட மட்டும் போகாம, சுத்தி முத்தி பார்த்தா எதானும் பரம்பரை கோயிலோ, அல்லது பழைய கோயிலோ கட்டாயம் வா, வான்னு கூப்பிடும். போங்க, முடிஞ்சா ஊர்காரங்க கிட்ட பேசி சுத்தம் பண்ண வைங்க. கட்டிக் கொடுக்கணுமா. சொந்த பந்தமெல்லாம் கூடிப்பேசி, மக்களோட ஒத்துழைப்புல கோயில கட்டி முடிங்க. வரலாற்றுச் சின்னத்தை காப்பாத்துன நல்ல பேரும், கோயிலை மீட்டதால் பெரியவங்க ஆசீர்வாதமும் கட்டாயம் உங்களுக்குக் கிடைக்கும். வாங்க, நாங்க தயாரா இருக்கோம்! நாங்க ரெடி, நீங்க ரெடியா?

Visitor Map

Locations of visitors to this pagecounter for wordpress

Navigation