You are herePonniyin Selvan Varalaatru Peruvizha Souvenir 2009 / நந்தினி தந்தை(யார்?) - கோகுல் சேஷாத்ரி
நந்தினி தந்தை(யார்?) - கோகுல் சேஷாத்ரி
நந்தினி தந்தை (யார்?)
கோகுல் சேஷாத்ரி
அந்த அழகுப் பதுமையை மனதில் நிறுத்தி நீண்ட நாட்களாகின்றன. இந்த விழா மலருக்காக அவளைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்த அக்கணமே நீரில் தெரியும் சந்திர பிம்பமாய் அவள் சடக்கென்று தோன்றுகிறாள். சிரிக்கிறாள். ஒரு காலத்தில் என்னை இரவு பகலாக அலைக்கழிக்க வைத்தவள். இவள் யார்? இவள் யார்? என்று ஏங்க வைத்தவள். இன்று சிரிக்கிறாள்.
அவள் தெரிந்ததைக் கொண்டு மட்டுமல்ல - தெரியாததைக் கொண்டும் ஆக்கப்பட்டவள். அவள் மர்மமாக இருப்பதனாலேயே அவளைப் பற்றிய கவர்ச்சி அதிகமாகின்றது. பகிரங்கமாக்கப்படும் விஷயங்கள் விரைவிலேயே அலுத்துவிடும். இரகசியமாய் மூடி மறையும் விஷயங்கள் மட்டுமே எப்போதும் மனதில் ஒரு குறுகுறுப்பை உண்டாக்கும். அப்படிப்பட்ட இரகசியக் குறுகுறுப்பை அனாயசமாக அளிப்பவள் அவள். அவள் காலமிட்ட நேர்க்கோட்டில் கண்ணை மூடிக்கொண்டு பயணம் செய்யும் கால்வாய் அல்ல. காட்டாறு. எதிர்படும் பாறைகளுக்கும் சரிவுகளுக்கும் ஏற்ப வளைந்தும் நௌ¤ந்தும் முன்னேறும் காட்டாறு. தோன்றிய சுவடே தெரியாமல் ஒரு நாள் மர்மமாய் மறைந்துவிடும் காட்டாறு.
உண்மையில் அவள் யார்? தெரியாது. எங்கிருந்து வந்தாள்? தெரியாது. எங்கே சென்றாள்? எதுவுமே தெரியாது. மிக முக்கியமாக - யாருக்கும் யாருக்கும் பிறந்தவள் அவள்? அதுவும் தௌ¤வாகத் தெரியாது. மேகங்கள் கூடியிருக்கும் வானத்தில் திடீரென்று மின்னல் தோன்றுவதைப் போல அவள் தோன்றுகிறாள். மறைகிறாள். எந்த இரகசிய இடத்திலிருந்து அவள் புறப்பட்டாளோ அங்கேயே சென்று சேர்ந்துவிட்டாள். அவளைப் பற்றி நாம் முழுவதுமாக ஒருபோதும் அறியவே முடியாது.
பல்லக்குத் திரை சலசலக்க, அதோ! அவளது பொற்கரங்கள் சிவிகையின் பட்டுத் துணியை விலக்குகின்றன. இளவரசே! இளவரசே! என்று வீணில் கூவிக்கொண்டிருக்கும் வந்தியத்தேவனின் உச்சந்தலை கிறுகிறுவென்று சுழல்கிறது. இரளவசி....இவளரசி.... என்றெல்லாம் அவன் வாய் குளறுகிறது. நந்தினி அவனைப் பார்க்கிறாள். பார்த்த மாத்திரத்தில் அவளுக்குள் ஏதோ ஒரு இரசாயன மாற்றங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. அவனைப் பற்றிய முற்ற முடிந்த முடிவுக்கு அவள் அந்தக் கணமே வந்துவிடுகிறாள். பின்வரும் காலங்களில் அந்த முடிவை அவள் மாற்றிக்கொள்வதேயில்லை. ஒருவருடன் சரிவரப் பேசிப் பழகாமல் ஒரே நொடியில் அப்படியொரு தீர்மானமான முடிவுக்கு வரமுடியுமா என்ன என்று கேட்கிறீர்களா? முடியும். அவளைப் போன்றவர்களால் முடியும். அவளுக்குள் நிகழும் இந்த முதல் மாற்றங்களைக் கல்கி விவரிப்பதில்லை. சொல்லப்போனால் அவளது உள்மனப் போராட்டங்களை மிகச் சில நேரங்களில்தான் அவர் தௌ¤வாகக் காண்பிக்கிறார். பல நேரங்களில் அதனை வேறு சில நிகழ்வுகளின் மூலமும் கதாபாத்திரங்களின் மூலமும் சூசகமாக உணர்த்துகிறார்.
உதாரணமாக, நந்தினி வந்தியத்தேவன் மேல் கொள்ளும் இந்த நேயத்தை - நேயமென்று சொல்லாமல் காதலென்றா சொல்வது? நந்தினியால் எவரையாவது காதலிக்க முடியுமா என்ன? - வேறொரு சந்தர்ப்பத்தில் மிகக் குறிப்பாக வெளிப்படுத்துகிறார் கல்கி. அந்த நிகழ்ச்சி இதுதான்: தன்னுடைய போக்கில் காட்டுவழியே போய்க்கொண்டிருப்பவனைத் தனது ஆட்களை விட்டுத் திடீரென்று கடத்திக்கொண்டு வரச் சொல்கிறாள் நந்தினி. எதற்காக என்று கேட்டால், சம்மந்தமில்லாமல் ஒரு பறக்கும் குதிரை வாங்கிக்கொண்டு வருவீரா? என்கிறாள். அவனைக் கடத்தும் உண்மையான காரணம் கடைசிவரை நமக்குப் புரிவதில்லை. ஒருவேளை அவனைப் பார்க்க வேண்டும் என்கிற தீராத ஆர்வத்தின் காரணமாக அவள் அதனைச் செய்திருக்கலாம். அதனால்தான் எதற்காக என்னை இங்கே கொண்டு வந்தீர்கள்? என்று அவன் வினவும்போது அவளிடம் தௌ¤வான பதிலில்லை. கதையின் சம்பவங்களுக்குப் பொருந்தாமல் துருத்திக்கொண்டு நிற்கும் இது போன்ற சில சம்பவங்களின் மூலமே அவளைப் புரிந்துகொள்ள முடிகிறது.
வந்தியத்யேவனுக்குக் கடைசிவரை அவளது நேயம் புரிவதேயில்லை. அதனால்தான் குந்தவையின் வாயிலாக அது வெளிப்பட வேண்டியதாகிவிடுகிறது. அந்த உண்மை அவனை ஆச்சரியப்படுத்துகிறது. அப்படியா? என்று வியக்கிறான் அவன். இதில் வியப்பில்லை. வந்தியத்தேவன் மூளையை மட்டும் நம்பிச் செயல்படும் ஆண்கள் உலகின் ஒட்டுமொத்தப் பிரதிநிதி. மூடி மறையும் மர்மங்களை அவர்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் கவிஞர்களால் அவளைப் புரிந்துகொள்ள முடியும். கலா இரசிகர்களால் அவளை இரசிக்க முடியும். ஏனெனில் அவர்கள் மூளையை விட இதயத்தை அதிகம் நம்புகிறவர்கள்.
நந்தனி உண்மையில் ஒருபோதும் பழுவேட்டரையரை ஏமாற்றுவதேயில்லை. பழுவேட்டரையர்தான் வலுக்கட்டாயமாகச் சென்று அவளிடம் ஏமாறுகிறார் என்கிறேன் நான். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆனாலும் அதுதான் உண்மை. திக்கற்று நிற்கிறேன் - கூட்டிக் கொண்டு சென்று பழுவூர் இராணியாக்கு ! என்று அவளா இறைஞ்சினாள்? இல்லவேயில்லை. அவராக அவளைக் கண்டார். ஆதரவளித்தார். கூட்டிக்கொண்டு சென்று உச்சாணிக் கொம்பில் உட்கார வைத்தார்.
பழுவேட்டரையர் மர்மங்களையும் இரகசியங்களையும் கையாளத் தெரியாத பல ஆண்களில் ஒருவர். அவரால் இறுதிவரை அவளைத் தொடமுடிவதில்லை. ஆங்காரத்துடன் கடைசியில் அவளது கழுத்தையே நெரித்து விடுகிறேன் ! என்று அவர் பல்லைக் கடிக்கும்போது அதில் தெரிவது அவரது இயலாமையேயொழிய வேறென்ன? ஆனால் அவரது இந்த பலகீனத்தை அவள் ஒரு அளவிற்கு மேல் பயன்படுத்திக்கொள்வதேயில்லை. கடைசிவரை அவருக்கு உண்மையானவளாகவே இருக்கிறாள். அவளது பழைய நினைவுகள் அவளை அலைக்கழிக்கின்றன - என்றாலும் அந்த அலைச்சல்களையெல்லாம் ஒரு புன்னகைக்குள் ஒளியவைத்துக்கொண்டு களைத்துப் போய் வீட்டிற்கு வரும் கிழவரை அவள் ஆசுவாசப்படுத்துகிறாள். ஒருபோதும் காமக்கணைகளைப் பகிரங்கமாக அவள் தொடுப்பதேயில்லை. ஓரிரு இடங்களில் நாதா! நாதா! என்று கொஞ்சுவதாக எழுதியிருந்தாலும் கல்கிக்கே அவளை விட்டுக்கொடுப்பதில் விருப்பமில்லை என்றுதான் தோன்றுகிறது. ஒரு மரியாதையின் காரணமாக அவள் புரியும் பணிவிடைகளைக் கிழவராக அவ்வாறு பாவித்துக் கொள்கிறார். விளக்கு வலையே விரிக்காமல் விட்டில் வந்து விழுந்தால் அது விளக்கின் தவறா என்ன?
விளக்கு. ஆம். அதுதான் அவளுக்கான சரியான உருவகமாக இருக்க முடியும். இருளில் திடீரென்று சுடருடன் தோன்றும் கைவிளக்கு. பிரத்யேகமான எந்த முயற்சியும் இன்றியே விதவிதமான விட்டில்களைத் தன் பக்கம் இழுக்கும் விளக்கு. விட்டிலைச் விளக்கின் சுடர் எரித்து விடுவதாகக் கருதிக்கொண்டிருக்கிறோம். அது தவறு. விளக்கு விட்டிலை எரிப்பதில்லை - கரைத்து விடுகிறது. தன்னுள் அமிழ்த்திவிடுகிறது. அப்படி அமிழ்த்திய சுவடு தெரியாமல் மீண்டும் எழுந்து நின்று சிரிக்கிறது. இது விளக்கின் இயல்பு. இதற்காக அதனைக் கோபிக்க முடியுமா என்ன?
நந்தினி எனும் விளக்கின் மீது வந்து விழும் இன்னொரு முக்கிய விட்டில் ஆதித்தன். பழுவேட்டரையரோ தெரியாமல் அவளிடம் சென்று விழுகிறார். இவன் தெரிந்தே சென்று விழுகிறான். இதுதான் முக்கியமான வேறுபாடு. அந்தக இரவில் சந்தன மின்னலுக்கு நடுவே இலங்கைக்குப் புறப்படத் தயாராக இருக்கும் தனது உற்ற நண்பனிடம் உள்ளத்தைத் திறந்து காண்பிக்கிறான் ஆதித்தன். அவனது வாய்வார்த்தைகளின் மூலம் விசுவரூபமெடுக்கிறாள் நந்தினி. விளையாட்டுத் தோழியாக - காதலியாக - பழுவூர் இராணியாக - திக்கற்ற அபலையாக - பழிவாங்கத் துடிக்கும் வில்லியாக - ஓ! அவளுக்குள் மட்டும் எத்தனையெத்தனை குணாதிசயங்கள்? இதில் கல்கியின் வருணனையையே மிஞ்சி நிற்பது இந்த ஒரு கட்டத்திற்காக அமர ஓவியர் மணியம் வரைந்த அற்புதமான படம்தான். கல்கியின் நூறாயிரம் வார்த்தைகள் விளங்க வைக்க முடியாத விஷயத்தை அந்த ஒரு ஓவியம் பளிச்சென்று விளக்கி விடுகிறது. ஒரு ஓவியன் காவியத்திற்கு எத்தனை தூரம் பலம் சேர்க்க முடியும் என்பதற்கு மணியத்தின் இந்த ஒரு ஓவியமே தகுதியான சான்று.
பழுவூர் அரண்மனையின் மாட மாளிகைகளில் பணிப்பெண்களுக்கு நடுவே எத்தனை ஒயிலுடனும் ஒய்யாரத்துடனும் இராணியாக நடந்துகொள்கிறாளோ அதே ஒய்யாரத்துடனும் அதிகாரத்துடனும்தான் காட்டிற்கு நடுவே பாண்டிநாட்டுச் சதிகாரர்களிடமும் நடந்து கொள்கிறாள். அங்கும் அவள் இராணி. இங்கும் அவள் இராணி. இரவிதாஸன் பலமுறை அவளைப் பணியவைக்க முயல்கிறான். பழைய சம்பவங்களைத் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தி அவளது பலவீனத்தைச் சுட்டிக்காட்டி அவள் தீனமானவள் என்கிறான். திரும்பத்திரும்ப அவன் இந்த முயற்சியில் ஈடுபடுவதிலிருந்தே அவனுடைய தொடர் தோல்வி புலனாகின்றது. இறுதியில் அவளை அவன் முழுமையான தலைவியாக ஏற்றுக்கொள்கிறான். இது ஆதித்தன் மரணத்திற்குப் பிறகு நிகழ்கிறது.
தனக்குப் பிடித்த இடம் எது என்று கேட்டால் மனிதர்கள் இல்லாத பாண்டி நாட்டு முழைகளைச் சுட்டுகிறாள் அவள். மனிதர்களின் மீதும் வாழ்வின் மீதும் கொண்டுவிட்ட கடுமையான கசப்புணர்வு அச்சமயத்தில் வெளிப்படுகிறது. கடைசிவரை அவள் கன்னி கழியாமல்தான் காலம் கழித்திருந்திருக்க வேண்டும். பொன்னியின் செல்வரிடம் உயிர்போகும் தருணத்தில் ஆதித்தன் கொலையைப் பற்றிய இரகசியத்தை அவள் வெளியிடும் அந்தக் கணத்தில்கூட "வெற்றி பெற்றது நான்தான் - நீயல்ல!" எனும் ஆணவம் அவளிடம் நிச்சயம் இருந்திருக்க வேண்டும்.
படிக்கும் வாசகர்களை இத்தனை தூரம் அலைக்கழிக்கும் அவளைப் பற்றிய இந்தக் கட்டுரையில் அவளது பிறப்பு இரகசியத்தைப் பற்றியும் கொஞ்சம் பேசுவோமா?
அவளது பிறப்பைப் பற்றிய உண்மையை அறிய உதவுவது கல்கி அவ்வப்போது விவரிக்கும் சில முக்கியச் சம்பவங்கள் - எண்ணங்கள். குழந்தைகள் விளையாடுவதற்காகச் சிறிய சிறிய பகுதிகளைத் தனித்தனியாகக் கொடுத்துப் பின்னர் அவற்றைக் குறிப்பிட்ட முறையில் இணைத்தால் ஒரு படம் வருவதுபோன்ற புதிர்கள் உள்ளனவே? (Jigsaw Puzzles) அதைப்போலவே கல்கியவர்களும் பலப்பல சம்பவங்களை ஒரு ஒழுங்கற்ற முறையில் நாவலின் நெடுகத் தௌ¤த்து வாசகனுக்கு ஒரு புதிராக அவளை அளிக்கிறார். அந்தச் சம்பவங்களைச் சரிவரப் பொருத்துவதன் மூலமே அவளது பிறப்பு இரகசியத்தை குழம்பாமல் மிகத் தௌ¤வாகவே அறிந்துகொள்ளலாம். ஆக அந்தச் சம்பவங்களை ஓரளவிற்குப் பொருத்திப் பார்ப்போம்.
திருமலையான ஆழ்வார்க்கடியானின் கூற்றுப்படி அவள் அவனுடன் அர்ச்சகர் வீட்டில் முழு வைணவ சூழ்நிலையில் சில காலம் வளர்ந்தவள். பின் பாண்டி நாட்டுப் போரின் காரணமாகச் சில காலம் காணாமற்போய்விட்டு மீண்டும் பழுவூர் இராணியாக அவனுக்கு தரிசனம் தருகிறாள். அதற்குப் பிறகு அவனை அவள் சந்திக்க முயல்வதில்லை. திருமலையின் இந்தக் கூற்றைக் குடந்தை ஜோஸியர் கூறுவதைப்போல் முக்காலே மூன்று வீசப் பொய்யும் கற்பனையுமாகக் கருதாமல் அரை வீச உண்மையாகவே கொள்வோம். இந்த இடைப்பட்ட காலத்தில் அவள் என்ன செய்தாள் என்பது தௌ¤வாகத் தெரியாது. ஆனால் ஆதித்தன் கூற்றுப்படி வீரபாண்டியனின் மரணத்தின்போது அவள் உடனிருந்திருக்கிறாள். பாண்டியன் உயிருக்காக ஆதித்தனிடம் மன்றாடியிருக்கிறாள். அவளை உதைத்துத் தள்ளிவிட்டு வெறியில் ஆதித்தன் பாண்டியன் தலையை வாங்குகிறான்.
அது சரி, கொல்லப்பட்ட வீரபாண்டியனுக்கும் நந்தினிக்குமான உறவு எத்தகையது? இது பலப்பல இடங்களில் ஐயந்திரிபற மிகத் தௌ¤வாக நந்தினியின் வாய்வாக்காகவே இந்த உறவு வெளிப்படுகிறது. குறிப்பாக, ஆதித்தன் பார்த்திவேந்திர பல்லவனிடம் இரவு அவளைப்பற்றி விவரிக்குங்கால் "இளவரசே! முதலில் என் காதலைக் கொன்றீர்கள். பின் என் காதலனான வீரபாண்டியனையும் கொன்றீர்கள். என்னையும் கொன்றால்தான் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும் போலிருக்கிறது..." என்று அவள் ஆத்திரத்துடன் கூறிதாகக் குறிப்பிடுகிறான். அதேபோல கடம்பூர் அரண்மனையில் வீரபாண்டியனின் தலை நந்தினியிடம் பழிவாங்குவதைப் பற்றி விசாரிக்க வரும்போதும் "அன்பே!" என்றுதான் அவனை(அதனை?) விளிக்கிறாள் அவள். ஆக, மிகத் தௌ¤வாக நந்தினியியைப் பொறுத்தவரை வீரபாண்டியன் அவள் காதலனேயன்றிச் சிலர் கருதுவதுபோல அவள் தகப்பன் அல்லன். தேவையற்ற இந்த வீண் குழப்பம் கல்கி நாவலுக்குள் புதைத்து வைத்திருந்த வேறொரு இரகசியத்தினால் உருவானது. அதனைப் பிறகு காண்போம்.
ஆக, வீரபாண்டியன் நந்தினியின் காதலனே எனும் ஒரு விஷயம் தௌ¤வாகிவிட்டபின் வேறு சில புதிர்களும் விடுபடுகின்றன.
நந்தினி மந்தாகினிக்குப் பிறந்தவள். அதில் சந்தேகமேயில்லை. அவளது உடன்பிறந்தவன் பழைய மதுராந்தகன். தன் தாயார் சோழர்களால் அநியாயமாக வஞ்சிக்கப்பட்டதே நந்தினியின் மனதில் கொழுந்து விட்டெறியும் பகைமைக்கான முக்கியக் காரணமேயன்றி வீரபாண்டியனின் கொலை மட்டுமல்ல. பிறக்கும்போதே அவள் அனாதையாக்கப்பட்டாள். வளரும்போது சோழ இளவரசிகளால் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறாள். உச்சக்கட்டமாக நடப்பதுதான் வீரபாண்டியன் படுகொலை.
பீலிபெய் சாக்காடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெறின்
என்பதைப்போல படிப்படியாக அவளுக்கு நடக்கும் கொடுமைகள் அவளை வஞ்சக நெஞ்சகியாக்கிவிடுகின்றன. ஈவிரக்கத்தை அடியோடு துடைத்தெறிந்து விடுகின்றன.
அழுத்தப்பட்ட நெஞ்சத்தோடு தன் பிறப்பு இரகசியம் தேடி அவள் அர்ச்சகர் வீட்டிலிருந்து வெளியேறுகிறாள். நந்தினியின் வாழ்வில் மிக முக்கியமான கட்டமான இந்த நிகழ்வுகள் கோடிகாட்டப் படுகின்றனவேயொழியத் தௌ¤வாக்கப்படுவதில்லை. எப்படியோ தன் பிறப்பு இரகசியத்தை அவள் அறிந்துகொண்டு விடுகிறாள். யார்-எதற்காக அவளுக்கு அந்த இரகசியத்தைப் புகன்றார்கள் என்பது பெரியதொரு கேள்விக்குறி. அந்த இரகசியத்தை அறிந்துகொண்ட பிறகுதான் அவளுக்கு வாழ்வில் ஒரு பிடிமானமும் குறிக்கோளும் ஏற்படுகின்றன. அவளாகச் சென்று வலுக்கட்டாயமாகத்தான் வீரபாண்டியனோடு தன்னை இணைத்துக்கொள்கிறாள். அவன் நிச்சயம் அவளை மறுத்தளித்திருக்க வேண்டும். ஏனெனில் நாடிழந்து காட்டில் அலையும் மன்னன் காதலா புரியமுடியும்? இருந்தும் தனது நிலையை விளக்கி அவள் அவனைக் காதலனாக வரிக்கிறாள். பாண்டியனோடு அப்படித் தன்னை இணைத்துக்கொள்ளவேண்டிய கட்டாயம் எப்படி ஏற்பட்டது அவளுக்கு?
இந்த ஒரு கேள்விதான் அவளது பிறப்பு இரகசியத்தை அவிழ்க்கும் முடிச்சு. இந்த முடிச்சு ஒருவாறாகக் கருத்திருமன் வாயிலாக வெளிப்படுகிறது. என்றாலும் இதனை முழுவதுமாகக் கல்கி வெளிப்படுத்த விரும்பவில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் அந்த இரகசியங்களுக்குள் பொன்னியின் செல்வன் போல வேறொரு மிகப்பெரிய நாவலே ஒளிந்துகொண்டிருக்கிறது என்பதை அவர் பூரணமாக உணர்ந்திருந்தார். மிக ஊன்றிப் படிக்கும்போது அவரது எழுத்துக்கள் இதனை மிகத் தௌ¤வாக உணர்த்துகின்றன.
கருத்திருமன் கதையில் அவனுக்கும் ஒரு மர்மமான "பாண்டிய மன்னருக்கும்" உண்டாகும் உறவு காண்பிக்கப்படுகிறது. இந்தப் பாண்டிய மன்னரைப் பல வாசகர்கள் வீரபாண்டியனாகக் கருதிக் கொள்வதினால்தான் நான் முன்னர் குறிப்பிட்ட குழப்பமே நேர்ந்தது. பல முறை இந்தப் பாண்டிய மன்னர் பற்றிக் கருத்திருமன் குறிப்பிட்டும் குறிப்பாக அவர் வீரபாண்டியன் என்று ஒரு முறைகூடக் குறிப்பிடுவதேயில்லை. ஆழ்வார்கடியான் கருத்திருமன் கழுத்தை நெறித்து மதுராந்தகனின் தந்தை யார்? என்று கேட்கும்போதுகூட அதனை மெல்லிய குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும்படி - அதாவது நமக்குக் கேட்காதபடிதான் - கல்கி எழுதுகிறார். கொலை செய்யப்படுவதற்கு முன்பாக ஆதித்தனிடம் மட்டும் நந்தனி இந்த இரகசியத்தைக் கூறுகிறாள். வீரபாண்டியனே அந்தப் பாண்டிய மன்னர் என்று கல்கி கருதியிருந்தால் அதனை இத்தனை சிரமப்பட்டு மறைக்க வேண்டிய அவசியமே நேர்ந்திராது. அவனை நந்தினியின் காதலனாகக் காட்டியிருக்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகியிராது.
சுருக்கமாகச் சொன்னால், நந்தினியின் தந்தை யார்? என்பதில் வாசகர்கள் குழப்பமடைந்தார்களே தவிர கல்கி ஒருபோதும் குழம்பவேயில்லை. சிலர் கூறுவதுபோல் வேண்டுமென்றே வாசகர்களையும் குழப்பவில்லை. "பாண்டிய மன்னர்" என்று பொதுப்படையாக அவர் குறிப்பிட நேர்ந்ததற்கான காரணங்களே வேறு.
இப்போது பொன்னியின் செல்வன் எனும் மகத்தான நாவலின் மிகப் பெரிய புதிரின் அத்தனை பாகங்களும் மிகத் தௌ¤வாகப் பொருந்தி வருகிறது பாருங்கள்....
• மந்தாகினிக்கும் ஒரு மர்மமான பாண்டிய மன்னருக்கும் இரட்டையர்களாய்ப் பிறப்பவர்கள் நந்தினியும் பழைய மதுராந்தகனும்
• மந்தாகினி கடலில் கருத்திருமனால் காப்பாற்றப்படும்போதே கர்ப்பமாகிவிட்டவள். அவளுக்குப் பித்துப் பிடித்ததற்குப் பின் ஒரு பயங்கரம் இருக்க வேண்டும். அந்த பயங்கரத்திற்குப் பின் சோழ நாட்டைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் இருந்திருக்க வேண்டும். அது யார் என்பதைக்கூட ஓரளவிற்கு என்னால் உணர முடிகிறது.
• தாயைத் தவிக்கவிட்டவர்கள், அவள் பிச்சியானதற்குக் காரணமானவர்கள், தாம் பிறந்த பாண்டிய குலத்திற்கு எதிரானவர்கள் என்று படிப்படியாக நந்தினியின் சோழர் பகைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன
இன்னும் ஒரு கேள்விதான் மிச்சமிருக்கிறது. ஒரே ஒரு கேள்வி. அந்த மர்மமான பாண்டிய மன்னர் யார்? அவருக்கும் கருத்திருமனுக்கும் என்ன சம்மந்தம்? அவருக்கும் வீரபாண்டியனுக்கும் என்ன சம்மந்தம்? அவர் வேறு - வீரபாண்டியன் வேறா? அப்படியெனில் பொன்னியின் செல்வன் நாவலில் அங்கு மட்டும் தலையைக் காட்டுபவருக்குப் பின்னர் என்ன ஆயிற்று?
இத்தனை தூரம் வந்துவிட்டவன் இந்தக் கடைசிக் கேள்வியை மட்டும் யோசிக்காமல் இருந்திருப்பேனா என்ன? யோசித்தேன். இரவு பகலாக யோசித்தேன். அந்தப் பாண்டிய மன்னரைத் தேடிப் பலப்பல வரலாற்றுப் புத்தகங்களை வாசித்தேன். தேடியவனுக்குக் காத்திருந்தது ஒரு பேரதிர்ச்சி.
அது..... அந்தக் கேள்விக்கான விடை....
அதனை ஒரு கட்டுரையில் விளக்கிவிட முடியாது. ஒரு பெரிய நாவலே எழுதியாக வேண்டும். இதனை நான் கூறவில்லை - கல்கியே பொன்னியின் செல்வன் முடிவுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
எல்லாம் சரி, "சேரர் கோட்டை" என்றொரு வரலாற்றுத் தொடர் வரலாறு டாட் காம் பத்திரிக்கையில் வந்துகொண்டிருக்கிறதாமே? அதில்கூட இதைப்பற்றியெல்லாம்...... எவரோ.... எழுதிக்கொண்டிருப்பதாக........ அதனை யாராவது வேலை மெனக்கெட்டு வாசித்தீர்களோ?



