You are herePonniyin Selvan Varalaatru Peruvizha Souvenir 2009 / காலத்தை வென்ற காவியம் - சதீஷ் அருண்
காலத்தை வென்ற காவியம் - சதீஷ் அருண்
காலத்தை வென்ற காவியம்
சதீஷ் அருண்
பொன்னியின் செல்வன் நவீனத்தைப் பற்றியோ, கல்கி அவர்களைப் பற்றியோ, வரலாற்றைப்பற்றியோ, எதைப்பற்றியும் எழுத எனக்கு என்ன தகுதி இருக்கிறது - எதாவது எழுதலாமா என்று யோசிக்கும் பொழுதே இப்படி பல கேள்விகள், என் மனதுள். பொன்னியின் செல்வனைப் படித்து வரலாற்றார்வம் கண்டு, வரலாற்றை தோண்டி எடுக்கப் புறப்பட்டேனா? உலகில் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்ளைப்போல் வாரம் ஒரு முறை, மாதம் ஒரு முறை அல்லது ஆண்டிற்கொருமுறையாவது இந்த நவீனத்தைப் படிக்கின்றேனா? எதுவும் இல்லை. எந்த தகுதியை வைத்துக்கொண்டு நான் எழுத எத்தனித்தேன் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

1950களில் வெளியான பொன்னியின் செல்வன் நவீனத்திற்கு அமர ஓவியர் மணியம் வரைந்த வண்ணப்படம்.
ஆனால், ஒரு தகுதி கண்டிப்பாக எனக்கு உண்டு - நானும் கல்கியின் ஒரு ரசிகன். பொன்னியின் செல்வனைப் படித்து பித்து பிடித்தவர்களில் நானும் ஒருவன். பொன்னியின் செல்வனைப் பற்றி சிறு வயது முதல் கேள்விப்பட்டு அதை கல்லூரி முடித்து வேலைக்குச் சென்ற பின் படித்த பொழுது எல்லோருக்கும் ஏற்பட்ட அதே உணர்வு. ஏதோ ஒன்றைத் தொலைத்த உணர்வு. அனைத்து இளைஞர்களையும் போல், ஆங்கில நவீனங்களைப் படிப்பதே மேதாவித்தனம் என்று நினைத்துக்கொண்டிருந்தவனை, சம்மட்டியால் அடித்ததைப் போன்ற ஒரு உணர்வு. ஏதோ பூர்வ ஜென்ம வாசனையை கண்டது போல் ஒரு பிரமிப்பு. அடுத்த ஐந்தாண்டுகள் எந்த ஒரு ஆங்கில நவீனத்தயும் தொட பிடிக்காமல் தமிழ் சரித்திர நவீனம், ஆன்மீகம் என்று படித்துக்கொண்டிருந்த காலமும் உண்டு.
ஒரு நவீனம், ஒரு கற்பனைக்கதை, ஒரே ஒரு முறைதான் படித்த கதை, இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்று வியந்துகொண்டிருக்கும் பொழுதுதான் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை கண்ணில் பட்டது. அட, நம்மைப்போல, நம்மையும் விட அதி தீவிர பித்தர்கள் இருக்கிறார்களே என்று ஒரு சிறு சந்தோஷம். காலப்போக்கில் இந்த குழு எடுத்த விஸ்வரூபம்...அப்பப்பா....பாராட்ட வார்த்தைகள் ஏது? தமிழ் சரித்திரத்தில் தொடர்புடையவர்கள், தீவிர வரலாற்றாய்வாளர்கள் ஆகட்டும், வரலாற்று ஆர்வலர்கள் ஆகட்டும், அவர்கள் வாழ்வில் பொன்னியின் செல்வனின் தாக்கம் நிச்சயம் உண்டு என்று சொன்னால், அது மிகை ஆகாது. அப்படி என்ன மாயம் இருக்கிறது இந்த நவீனத்தில்? ஏன் மற்ற சரித்திர நவீனங்கள் இந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை? கதையா, கதாபாத்திரங்களா எது நம்மை இப்படி பாதிக்கிறது? இதுதான் என்று சுட்ட யாராலும் முடியாத ஏதோ ஒன்று இந்த அற்புதப் படைப்பில் உள்ளது.
கல்கி ஒரு மாபெரும் எழுத்தாளர், தீவிர தேசபக்தர், சமூக அவலங்களை சாடியவர், சமூக மற்றும் பிற சரித்திர நவீனங்களும் எழுதியுள்ளார். ஆனால் கல்கி என்றதும் நினைவுக்கு வருவது 'பொன்னியின் செல்வன்' தான். கல்கியை அறியாதவர்கள் கூட பொன்னியின் செல்வனைப்பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள். சமகாலத்தவர் மட்டும் அல்லாமல், மூன்று தலைமுறை தாண்டியும் வாசகர்களை வசீகரிக்கும் ஆற்றல் கொண்டது இந்த பொன்னியின் செல்வன். மற்ற படைப்புகளுக்கு இல்லாத மகத்துவம் இதற்கு என்ன என்று கேட்டால், பலரின் வாழ்க்கைப் பாதையை மாற்றியமைத்த பெருமை வேறு எந்த படைப்புக்கும் இல்லாத அளவுக்கு, இந்த கதைக்குதான் இருக்கிறது. ஒவ்வொரு படைப்பும், சிலரை ஏதாவது ஒரு வகையில் பாதிக்கும். ஆனால், படித்த எல்லோரையும் ஒரே போல் பாதித்த ஒரே படைப்பு பொன்னியின் செல்வன் மட்டுமாகத்தான் இருக்க முடியும்.
பொன்னியின் செல்வனுக்கு இரு தரப்பு வாசகர்கள்தான் உண்டு. இதைப்போல் வேறு இல்லை என்று, முன்பு சொன்னது போல், ஆண்டிற்கொருமுறை பாராயணம் செய்யும் ஒரு கூட்டம் (மீண்டும் மீண்டும் படிக்கப்பட்ட நவீனம் உலகிலேயே இது ஒன்றாகத்தான் இருக்க முடியும்), முதல் பத்தியையே தாண்ட முடியாமல், இதை யார் படிப்பார்கள் என்று ஓரம் கட்டும் ஒரு கூட்டம். இந்த வாசகத்தைப் படித்துக்கொண்டிருக்கும் எவரும் இரண்டாவது கூட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை. படித்தவர் அனைவரையும் ஒரு சேர பாதித்தது என்று சொன்னோமே, அதற்கு ஒரு சில காரணங்களாவது இருக்க வேண்டுமே? சிலவற்றையாவது குறிப்பிட்டாக வேண்டும் அல்லவா? முழு முதற்காரணம், பெற்றோர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. நூற்றுக்கு தொண்ணூறு பேர், தன் சிறு வயதில் தனது தாயோ தந்தையோ, பொன்னியின் செல்வனைப் பற்றி கூறக்கேட்டுத்தான் அதன் மீது ஒரு பற்றை வளர்த்திருப்பார்கள். பிறகு அவரவர் இரசனைக்கேற்ப, பொன்னியின் செல்வனை விட சுவையான கதை கிடைக்குமா என்று தமிழ் நவீனங்களை தேடிப்பிடித்து படித்து, சரித்திர நவீனங்களினால் பித்து பிடித்து கடைசியில் பொன்னியில் செல்வனைப்போல் இல்லை என்று மறுபடியும் பொன்னியின் செல்வனையே படித்து, பிறகு அதுவே போதையாகி, வாரம், மாதம் இல்லை ஆண்டிற்கொருமுறை பாராயாணம் செய்யுமறளவிற்கு போய் நிற்கும்.
கதை, கதை சொல்லும் விதம், கதாபாத்திரங்கள் இவைகள் தாம் இந்த மகத்தான வெற்றிக்கு பின்புலம் என்று சொன்னால் அது மிகை ஆகாது. சுவரில்லாமல் சித்திரம் இல்லை. அது போல் நல்ல கதை அம்சம் இல்லாமல் ஒரு நவீனம் வாசகர் நெஞ்சில் இடம் பிடிக்க முடியாது. சிறு குழந்தைகளுக்கு பாட்டி கதை சொல்லுவதைப் போல, கல்கி அவர்களே வாசகர்களுடன் அளவளாவி கதை சொல்லும் பாங்கு, முதல் அத்தியாயத்திலிருந்தே நம்மை கட்டி போட்டு விடுகிறது. வந்தியத்தேவனின் பார்வையிலேயே பெரும்பான்மையான கதையை சொன்னாலும், அதையே முழுவதும் பின்பற்றாமல், தானும் வாசகர்களுடனனான தொடர்பை துண்டித்துக்கொள்ளாமல் அவ்வப்பொழுது கதை சொல்லி, கதையினூடே வரலாற்றுச் செய்திகளையும் சொல்லி...அப்பப்பா...என்ன ஒரு கதம்பமான நடை. இந்த நடை அறுபது ஆண்டுகள் கடந்து, இன்றைய கதாசிரியர்களிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால், கல்கி அவர்களின் எளிய, இனிய, அற்புதமான நடை எழுத்துலக வரலாற்றில் ஒரு முன்னோடி என்று கொள்ளலாம்.
பொன்னியின் செல்வனில் வரும் பாத்திரங்கள் அனைவரும் நமது அண்டை அயலார் வீட்டில் வசிப்பவர்களாகத்தான் நம் கண்களுக்குத் தெரிகிறார்கள். எந்த ஒரு பாத்திரமும் நமக்கு பரிச்சயம் இல்லாதவர் போல் ஒரு பொழுதும் நமக்கு தோன்றுவது இல்லை. கண்களுக்குத் தெரிகிறார்கள் என்றா சொன்னேன்? அதை யாரும் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏன் என்றால், இல்லாத ஒன்றை இருப்பதாக நான் சொன்னால்தானே நீங்கள் அதை பொருட்படுத்த போகிறீர்கள். கல்கியின் வருணனை ஒவ்வொரு காட்சியையும் நம் கண் முன்னே அல்லவா கொண்டு வருகிறது. நள்ளிரவு சதியாலோசனையின்போது ஆழ்வார்கடியான் மதிலிலிருந்து எட்டிப் பார்க்கும் பொழுது, நாமும் அவர் அருகில் அமர்ந்தல்லவா அந்த காட்சிகளைப் பார்க்கிறோம். காவிரியாற்றின் பொலிவை வருணிக்கும்போது கரைபுரண்டோடும் காவிரி நம் கண் முன்னே படற்கிறதல்லவா? நிலவரையில் வந்தியத்தேவன் செல்லும்போது நாமும் திடுக்கிடும் இதயத்துடன் அல்லவா அவன் பின் சென்றுகொண்டிருக்கிறோம்? இன்னும் சொல்லப்போனால், அந்த இருட்டில் சரியாக கண் தெரியாததால், நாமும் நமது கண்களைச் சுருக்கி, இருட்டிற்குப் பழகி கொண்டுதான் படித்திருப்போம். யோசித்துப் பாருங்கள், நான் சொல்வது உண்மை என்று ஒப்புக்கொள்வீர்கள். இப்படி கதையுடன் நம்மை ஒன்றி ஊறிப்போக வைத்த எழுத்தாளர் வேறு யார் இருக்கிறார்கள், கல்கியைத் தவிர?
பார்த்தீர்களா, கதாபாத்திரங்களை பற்றி பேச ஆரம்பித்து வேறு எங்கோ போய்விட்டேன். அதுதான் கல்கியின் தாக்கம். ஒரு கணம் கோடியக்கரையில் இருந்தால், அடுத்த கணம் பழையாறை, அடுத்த கணம் தஞ்சை அல்லது குடந்தை என்று காட்சிகளை படரவிட்டு, நம்மை அலைகழித்து அதிலும் ஒரு ஆனந்தத்தை தந்தவர் கல்கி. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நம்மை போல் பல்வேறு சந்¢¢தர்பங்களில்¢ பல்வேறு குணாதிசயங்களோடு காண்கிறோம். ஒவ்வொரு முறை ஒவ்வொரு கதாபாத்திரத்திற்க்காக வேதனை படுகிறோம். அறுபது ஆண்டுகள் கழித்தும் எது நிஜம் எது நிழல் என்று வேறுபடுத்த முடியாதபடி அமைந்திருக்கின்றது கல்கியின் பாத்திரங்கள். இன்றும் நந்தினையை வரலாற்றுப் பழுவூர் இராணி என்று நினைத்திருப்பவர்கள் எவ்வளவு பேர். இன்றும், மந்தாகினி தேவி நிஜ பாத்திரம் என்று நினைப்பவர்கள் ஏராளம்.
கல்கியின் படைப்புகளில், பொன்னியின் செல்வன் தான் மிகச் சிறந்ததா என்று கேட்டால், அதற்கு கல்கியின் ரசிகர்களான நாம் எளிதாக 'இல்லை' என்று பதில் சொல்லிவிடலாம். ஏனென்றால், நமக்கே தெரியும், சிவகாமியின் சபதமும், பார்த்திபன் கனவும் கேள்விகளுக்கு இடம் கொடா முழு நவீனங்கள் என்று. அவரின் சமூகக் கதைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், திரைப்படங்களாக மிளிரும் அளவுக்கு நேர்த்தியானவை. ஆனால், பொன்னியின் செல்வனை ஆயிரம் முறை படித்தாலும், நந்தினியின் தந்தை யார், பாண்டிய இளவலாக வரும் அந்தச் சிறுவன் யார் குழந்தை, ஆதித்த கரிகாலனை கொன்றது யார், போன்ற என்னற்ற கேள்விகளும் அதற்கு விடை காண முடியா விவாதங்களும்தான் மிச்சம். ஆனாலும், நாம் மீண்டும் மீண்டும் பொன்னியின் செல்வனைப் படிக்கும் அளவிற்கு வேறு எந்த ஒரு நவீனத்தையும் படிக்க அவா எழுவதில்லை. அதற்குக் காரணம் என்ன என்று யோசித்தால் விடை கிடைக்கவா போகிறது?
கல்கி தனது படைப்புகளால் ரசிகர்களை மட்டுமா சம்பாதித்தார்? தனக்கு வாரிசுகளையும் அல்லவா உருவாக்கினார். கல்கியால் ஈர்க்கப்பட்டு கதாசிரியர்களாய் ஆனவர்கள்தான் எவ்வளவு பேர். விக்ரமன் அவர்கள் தொடங்கி இன்றைய வெங்கடேஷ், கோகுல், திவாகர் என்று பட்டியல் நீண்டுகொண்டல்லவா இருக்கிறது. என்னையும் இப்படி ஒரு கட்டுரையாளனாக மாற்றிய பெருமை, கண்டிப்பாக கல்கியைத் தான் சாரும். மற்ற படைப்புகள் அற்புதமானவைதான் என்றாலும், எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம், பொன்னியின் செல்வன் ஒர் விசேஷ படைப்பு என்பது.
ஒரு எழுத்தாளர், தன் குறிபிட்ட ஒரு படைப்பால் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக, மூன்று தலைமுறையும் தாண்டி தமிழ் நெஞ்சங்களில் இப்படி ஒரு ஆதிக்கத்தைச் செலுத்த முடியும் என்றால், அதற்கு காரணம் இல்லாமலா இருக்கும். மேலே குறிப்பிட்ட காரணங்களும் குறிப்பிடாத காரணங்கள் பலவும் இருக்கலாம். மறுப்பதற்கில்லை. ஆனால் எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒரு காரணம், கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனில் வாரி இரைத்திருக்கும் வரலாறு தான். நம்மையும் அறியாமல் நமக்குள் ஒளிந்திருக்கும் வரலாற்றுத் தாகத்தை தணிக்கும் நீராய் பொன்னியின் செல்வன் அமைந்திருப்பதால் தான் நமக்கு பிரியமான கதையாய் காலங்கள் கடந்தும் பரிமளிக்கிறது.
ஆம். நமது வரலாறு இவ்வளவு அற்புதமானது என்பது நமக்கு தெரியாததால், பொன்னியின் செல்வனைப் படிக்கும் பொழுது, நமது சங்க காலத் தலைவன், முதன்முதலில் தன் தலைவியை நேருக்கு நேர் சந்திக்கும் பொழுது, எப்படி காதல் வயப்படுவானோ, அதைப்போல் நாமும் நமது வரலாற்றின் மீது காதல் வயப்பட்டு, மயங்கி நிற்கிறோம். பெரும்பாலும், இது நமக்கே தெரியாமல் நடப்பதுதான் கல்கியின் திறமைக்கு சான்று. பள்ளியில் படிக்கும் வரலாறும் தூக்கத்திற்குத்தான் வித்திட்டதே தவிர நமது முன்னோர்கள் எத்தகைய வாழ்க்கை வாழ்ந்தார்கள், என்னென்ன செய்தார்கள் என்பன நமக்கு மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் வந்தது, வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு நமக்கும் ஒரு பெருமை வாய்ந்த சரித்திரம் இருக்கிறது என்பதை பறைசாற்ற கல்கி கையாண்ட கருவிதான் பொன்னியின் செல்வன்.
பொன்னியின் செல்வனை படித்த எவரும் நினைக்கும் முதல் விஷயம், வந்தியத்தேவன் சென்ற பாதையில் நாமும் போய் பார்த்தால் என்ன, என்பதுதான்? இங்கு தான் நம் வரலாற்று தேடல் தொடங்குகிறது. வரலாறு என்று தேடப்புறப்பட்டால், அன்றைய சொச்சங்கள் என்று இன்று இருப்பது, நமது கோயில்கள் மட்டும்தான். அதற்காகத்தான் கல்கி கோயில்களைப் பற்றிய செய்திகளை கதை முழுவதும் தூவி விட்டிருக்கிறார். ஒவ்வொரு ஊரைப் பற்றிச் சொல்லும்போதும், அங்கு உள்ள சரித்திர புகழ் பெற்ற கோயிலைப்பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார். பள்ளிப்படையாகட்டும், பாடல் பெற்ற ஸ்தலமாகட்டும், வரலாற்றுச்சிறப்பு மிக்க கோயில் ஆகட்டும், அனைத்தைப்பற்றியும் விவரிக்கிறார். இந்த ஆர்வம் எவ்வளவு தூரம் என்றால், திருமழப்பாடியில் பிறந்து வளந்த செம்பியன் மாதேவி, சிவனடியார்களிடம், மழப்பாடிக் கோயிலை பற்றியே கேட்டறிவதாக ஒரு காட்சியை கதையினுள் புகுத்தியுள்ளார். இது பிழையாகுமே என்பது கூட அவருக்கு ஒரு பொருட்டல்ல, நம் பாரம்பரியத்தை, கலாசாரத்தை, வரலாற்றை, எப்படியாவது வாசகர்களுக்கு சொல்லிவிட வேண்டும் என்ற தவிப்பு.
சோழர்கள் வரலாற்றை, விஜயாலச் சோழன் முதல் சுந்தர சோழன் வரை, கதை முழுவதும் எவ்வளவு முறை நமக்கு திரும்ப திரும்பச் சொல்லியிருப்ப்பார்? ஒவ்வொரு சில அத்தியாயங்களுக்கு ஒரு முறை, நமக்கு அதை ஞாபகப்படுத்திக்கொண்டே நம்மையும் அரியாமல், சோழ வரலாற்றை நாம் நெட்டுரு போட வழி வகுத்திருப்பார். கோயில்கள் பற்றிய செய்தியாகட்டும், போர்கள் பற்றிய செய்தியாகட்டும், நடந்ததை நேரில் பார்த்தவர் போல் எழுதியிருக்கும் நடை, காட்சிகளைக் கண்கள் முன் கொண்டு வந்து, நாமும் அந்த காட்சியில் ஒரு பாத்திரமாகவே மாறி அதை மணதில் பதிய வைத்திருப்போம். என்ன அற்புதமான ஒரு வழிமுறை. இதை ஏன் நம் பாட புத்தகங்கள் கையாளக்கூடாது?
இந்த தாக்கங்களால், அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தஞ்சையையும், குடந்தையையும், நாகைக் காரோணத்தையும், நேரில் சென்று பார்த்தால் என்ன என்று துவங்கி, அதன் அழகில் மயங்கி, அதன் வரலாற்றில் ஊறி, அதன் தொடர்பான வரலாறுகளை அலசி, அதன் சிற்பங்களைன் மேல் மோகங்கொண்டு, சோழர்கள் சிற்பத்திற்கும் பல்லவர் சிற்பத்திற்கும் ஆறு வித்தியாசம் கண்டு பிடிக்கத் துவங்கி, அந்த சிற்பத்தின் பின்னணியான பக்திக் கதைகளைக் கண்டு, இன்னும் பல புது அனுபவங்களைப் பெற்று, நமது வரலாற்றைக் கண்டு அதிசயிப்பதா, நமது பாரம்பரியத்தைப் பாராட்டுவதா, நமது முன்னோர்களின் கட்டிடக் கலைத்திறனை கொண்டாடுவதா, அவர்களின் சிற்பக் கலையை வணங்குவதா இல்லை அவர்கள் பக்தியை மெச்சுவதா என்று திக்கு முக்காடிப் போய் நிற்கும் தருவாயில்தான் நமக்கு விளங்கும், நாம் இவ்வளவு நாள் கண்டாய்ந்தது நமது கலசார பாரம்பரியத்தின் ஒரு கடுகளவுதான் என்பது. கற்றது கையளவே இவ்வளவு என்றால், நாம் கல்லாத உலகளவு வரலாறு - அப்பப்பா நினைக்கவே மலைப்பாக இருக்கிறதல்லவா? இவ்வளவும் நம் தமிழ் வரலாற்றுக்கு மட்டும் என்றால், நம் பாரத வரலாறு? ஆயிரம் ஜென்மங்கள் எடுத்தாலும் அதன் கரையை நாம் காண முடியுமா?
இப்பேர்பட்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான நாம், நமது வரலாற்றை புறக்கணித்துவிட்டு அதை சரியாக, முறையாக புரிந்துக்கொள்ள யத்தனிக்காமல், யார் யாரோ சொல்லுவதைத்தான் நம் வரலாறு என்று கண்மூடித்தனமாக நம்பி ஏமாறுவது முறையா? இது தான் கல்கி பொன்னியின் செல்வன் மூலம் நமக்கு விட்டுச்சென்றுள்ள கேள்வி. இந்த கேள்விச்சுடர் தான் பலரது நெஞ்சங்களில் தீயாக இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது. இதுவே பல உண்மையான வரலாற்றாய்வுகளுக்கு வழி வகுத்திருக்கிறது, இன்னும் வழி வகுத்துக்கொண்டிருக்கிறது. நமது தேசத்தின் பாரம்பரியமே, கேள்வி கேட்டு அதற்கு விடை கானுவதுதான். அதைத்தான் வேதங்களும், உபநிஷதஙகளும்¢ அதற்கு உரை எழுதிய சங்கரர், இராமாநுஜர் போன்றோரும் நமக்கு கூறிச்சென்றுள்ளார்கள். அதையே திருவள்ளுவரும்,
'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு.'
என்று குறித்துச் சென்றார்.
இந்த நோக்கத்தில் தான் கல்கி தனது மறைவிற்குச் சில மாதங்களுக்கு முன், பொன்னியின் செல்வனை நிறைவு செய்து தனது பிரவிப்பயனை அடைந்தார் என்று சொன்னால், அது மிகையாகாது. அவர் இந்த அரும்பெரும் காப்பியத்தின் மூலம் நம்முள் கொழுந்து விட்டு எரியச்செய்த தீ நம் வரலாற்றைத் தோண்டி எடுக்கும் வரை அணையாது. கல்கி நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம், அவர் படைப்புகளை பாராட்டி அதை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வழிகோலுவதே நாம் அன்னாருக்கு செய்யும் நன்றியாகும்.
வாழ்க கல்கி!!! வாழ்க தமிழ்!!! வாழ்க பாரதம்!!!



