You are herePonniyin Selvan Varalaatru Peruvizha Souvenir 2009 / எட்டயபுரத்தில் என் எண்ணங்கள் - சீதாலட்சுமி
எட்டயபுரத்தில் என் எண்ணங்கள் - சீதாலட்சுமி
எட்டயபுரத்தில் என் எண்ணங்கள்
சீதாலட்சுமி
எண்ணங்களின் ஊர்வலம் புறப்பட்டு விட்டது. நீண்ட பயணம். நினைக்கும் பொழுது வியப்பைக் கொடுத்தாலும் எனக்குள்ளே பரவும் இன்ப உணர்வுகளை மறுக்கவில்லை. எங்கோ ஒரு கிராமத்தில் வாழ்ந்த ஒருத்தியின் வாழ்க்கையில் இத்தனைச் சம்பவக் குவியலா?
எட்டயபுரம் பாரதியால் பலரும் அறியப்பட்ட ஊர். வெளியில் அதிக விளம்பரமில்லாத பல செய்திகளைக் கூற விரும்புகின்றேன். கவிஞர்களும் கலைஞர்களும் வாழ்ந்த, வந்து போன கரிசல் மண். சீறாப்புராணம் பாடிய இஸ்லாமியக் கவிஞர் உமறுப் புலவர் வாழ்ந்த ஊர். குமார கீதம் பாடிய பெண்பாற் புலவர் சுப்பம்மாள் வாழ்ந்த மண்.
எட்டயபுரத்தில் வாழ்ந்த மற்ற படைப்பாளிகள் : திருநெல்வேலி சீமைச் சரித்திரம் என்ற வரலாற்று நூலாசிரியர் குருகுகதாசப் பிள்ளை. இவர் மகன் இளசை கு. பக்தவச்சலமும் ஒரு கவிஞர். எட்டயபுரத்தில் தோன்றிய எஸ்.ஏ. அய்யர் இந்திய தேசிய இராணுவத்தில் மிகத்தீவிரமாக ஈடுபட்டதுடன் நேருஜி பற்றி ஆங்கிலத்தில் நூல் இயற்றியுள்ளார்.
400 ஆண்டுகள் பழமையை விவரிக்கும் எட்டயபுரம் வரலாறு என்ற நூலைத் தொகுத்துப் படைத்தவர்கள் , வே.சதாசிவன், இளசை மணியன், மா. இராஜாமணியும் ஆவர். சுவாமி தீட்சதர் எழுதியது வம்சமணி தீபிகை. கே.கருணகரப் பாண்டியன் எழுதியது History of Ettaiyapuram .
இந்தத் தலைப்பில் ஆராய்ச்சி செய்து M.Phil பட்டம் பெற்றவர் பாரதியார் வாழ்க்கைச் சரித்திரம், பாரதியின் இசைஞானம் பற்றி நல்லதோர் வீணை , தினமலர் பத்திரிகை நிறுவனர் டி.வி. இராமசுப்பைய்யர் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் கடல் தாமரை என்ற நூல் இவைகளைப் படைத்தவர், எழுத்தாளரும் பேச்சாளருமான தி. முத்துக்கிருஷ்ணன் ஆவார். இவர் உயர் நிலைப் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த தோழரும் ஆவார்.
இந்தியா பத்திரிகையின் மூலப்பிரதிகளைக் கொண்டு ஆய்வு செய்து பாரதி தரிசனம் என்ற நூலை இளசை மணியன் எழுதியுள்ளார். வீரன் அழகுமுத்து யாதவ் என்ற நூலை மா. இராஜாமணி எழுதியுள்ளார். சோதிடத்தைப் பற்றி பல புத்தகங்கள் எழுதிதுடன் பல சோதிட இதழ்களிலும் புலமையைக் காட்டியவர் கோபிகிருஷ்ணன். கவிஞர் கலாப்ரியா எழுதிய நூல் எட்டயபுரம். ஆனந்தவிகடனில் சிறுகதைக்குப் பரிசு வாங்கியவர் வே. சதாசிவன். அதே விகடனில் சிறுகதைக்கு முத்திரை மதிப்பு பெற்றவர் சீதாலட்சுமி (நான் தான். என்னைப் பற்றிய விபரங்கள் எண்ணங்கள் ஊர்வலத்தில் வருவதால் மேற்கொண்டு விபரங்கள் இங்கே தரவில்லை.)
இன்றும் எட்டயபுரத்தில் வாழும் எழுத்தாளர்கள், இளசை மணியன், இளசை சுந்தரம், இளசை ஜமால், இளசை கணேஷ், டாகடர். மரிய செல்வம் ,புலவர் மாரியப்பன், ஜீவாதிலகம்.சோலைச்சாமி யாகும். இளசை அருணாவின் கையெழுத்து அற்புதமானது. கரிசல் மண் என்ற புத்தகத்தின் சொந்தக்காரர். எட்டயபுரம் மட்டுமல்ல, மற்ற பகுதி வாழ்மக்களையும் ஆராய்ந்து எல்லா எழுத்தாளர்களைப் பற்றிய ஒரு தொகுப்புரை. இரண்டு புத்தகங்களில் நிரப்பி எங்களைச் சிரஞ்சீவிகளாக்கிய இளசை அருணாவிற்கு நாங்கள் எல்லோரும் கடமைப் பட்டவர்கள்.
இவர் தொகுத்த குறிப்புலிருந்து நான் எடுத்த முத்துத் தகவல்களைத்தான் இங்கே தருகின்றேன்.
எட்டயபுரத்து ஓவியர்களும் சிறப்பு வாய்ந்தவர்கள். மா.முத்து, சங்கரவாத்தியார், எஸ் இராம சுப்பு, மாறன், கண்ணன். இவர்கள் என்னுடன் வாழ்ந்தவர்கள் என் எண்ணங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். எங்கள் ஊரில் பாடகரும் உண்டு. நரசிம்மன் வானொலியில் நிறையப் பாடியவர். எங்கள் ஊர் நடிகர்களை விட முடியுமா? ஈ.ஆர். சகாதேவன், டி.வி. நாராயணசாமி, பி.எஸ் வென்கடாசலம் திரையுலகில் இவர்களைப் பார்த்திருக்கலாம்.
ராஜா உயர்நிலைப் பள்ளி நூறு ஆண்டுகளைக் கடந்தும் சில ஆண்டுகளாகிவிட்டன. பாரதி மட்டுமல்ல, ஸ்வாமி சிவானந்தா என்ற குப்புசாமியும் இப்பள்ளியில் படித்தவர்கள். மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனையின் நிறுவனர் டாக்டர் வெங்கடசாமியும் இங்கு படித்தவர். நானும் இங்கே படித்தவள்.
இந்த ஊரில் வாழ்ந்த இன்னும் சிலரைப் பற்றிக் கூறவேண்டும். நாகூர்முத்துப் புலவர், கடிகை முத்துப்புலவர், கீரைமச்தான் புலவர்கள் வாழ்ந்த பூமி.
எட்டயபுரம் ஆஸ்தானத்திற்கு நிறைய சந்கீத வித்வான்கள் உண்டு. ஆனால் அங்கேயே தங்கியிருந்தவர்களில் முக்கியமானவர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரின் தம்பியான பாலுசாமி தீட்சதர். தம்பி வாழ்ந்த இடத்திற்கு அண்ணனும் வந்தார், வாழ்ந்தார், மறைந்தார். முத்துசாமி தீட்சதருக்கும் நினைவு மண்டபம இருக்கின்றது. பாரதியின் நினைவு மண்டபத்திற்குக் கொஞ்ச தூரத்திலேயே இதுவும் அமைந்துள்ளது. உமறுப்புலவருக்கு 1912ஆம்ஆண்டில் பிச்சைக்கோனார் என்பவர் நினைவுச் சின்னம் எழுப்பியுள்ளார்.
எட்டயபுரத்தின் பேச்சுத்திறமைக்கு, கே.பி.எஸ் நாராயணன் (பேச்சுக்கும் எழுத்துக்கும் பயிற்சி கொடுத்து உருவாக்கிய தந்தை), முத்துக்கிருஷ்ணன், தி. சுப்பைய்யா, கலிங்கன், தேவன் ஆகியவர்கள் சான்றுகள். பட்டிமன்றம், வழ்க்காடு மன்றத்தில் ஊர்வலம் வந்தவர் கு.துரைராஜ் அவர்கள்.
முற்போக்கு வாலிபர் சங்கம் ஒன்று பல வருடங்களாக இயங்கி வருகின்றது. வருடந்தோறும் பாரதி விழா டிசம்பர் மாதம் நடத்தி வருகின்றனர். அருமையான நூலகம் வைத்துள்ளனர். பாரதி ஆய்வாளர் அமரர் தொ.மு. ரகுநாதன் தனது ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள நூல்களை அன்பளிப்பாக வழங்கி பாரதி ஆய்வு மையம் அமைத்துக் கொடுத்திருக்கின்றார். அமரர் கு. துரைராஜ அவர்களின் புத்தகங்களை அவரது துணைவியாரும் இதே மையத்திற்குக் கொடுத்துள்ளார்.
எட்டயபுரத்தில் ஒரு அச்சகமும் அக்காலத்தில் இருந்தது. அரண்மனக்குச் சொந்தமானது. இங்குதான் சுப்புராம தீடசதரின் சங்கீத சம்பிர்தாயப் பிரதர்கிணி என்ற நூல் அச்சானது. இப்பொழுதும் அந்தத் தெருவின் பெயர் அச்சாபீஸ் தெரு.
இந்நாடு சுதந்திரம் பெறும் முன்னர் வந்த பெரியவர்களில் இருவரின் பெயர்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. 1934 ஜனவரி மாதம் மகாத்மா காந்தி வந்தார். 1935-ல் வ. ஊ. சிதம்பரனார் வந்தார்.
இது ஒரு சின்ன ஊர். இத்தனைச் செய்திகளும் இந்த ஊருக்குச் சொந்தமா? எதற்கு இத்தனை விபரங்கள்? பயிர் வளர்ந்த விளை பூமியின் தன்மை தெரிந்தால் வியப்பு வராது. ஊர்வலத்தில் இதன் உண்மைகள் உணரலாம்.
நான் முதலில் பார்த்த எழுத்தாளர்கள் இருவர். ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பார்த்தேன். மதிப்பிற்குரிய இராஜாஜி அவர்களும், பொன்னியின் புதல்வர் திரு கல்கி அவர்களும் ஆவார்கள்.
அரண்மனையின் விருந்தினர் விடுதியில் அவர்கள் தங்கியிருந்தனர். அவர்களைக் கவனித்துக் கொள்ள அமர்த்தப் பட்டவர்களில் மணியும் ஒருவர். தன் ஆசை மகளைக் கூட்டிப் போய் அவர்களைக் காட்ட மணி விரும்பினார். அவருடைய இந்த உணர்வுதான் மகள் பல பெரியவர்களைச் சந்திக்கும் காரணமாக அமைந்தது.
"பாப்பா, இவர்களை நமஸ்காரம் பண்ணு !"
அவள் நமஸ்காரம் செய்தபின் கல்கி அவளை அருகில் வரவழைத்து ஏதேதோ கேள்விகள் கேட்டார். எதுவும் இப்பொழுது நினைவிற்கு வரவில்லை. அவர்களைப் பற்றி அவள் அம்மா கூறியிருந்தது:
“வெள்ளக்காரன் கிட்டேயிருந்து நம் நாட்டைத் திரும்ப வாங்க சண்டை போடுகிற காந்திக் கட்சியைச் சேர்ந்தவர்கள்"
அவளைச் சுற்றி நடக்கும் எல்லாமே புரிந்தும் புரியாமலும் இருந்தது. அப்பொழுது அவளுக்கு வயது எட்டு.
என் ஊர்வலம் ஆரம்பித்து விட்டது. எட்டயபுரத்தில் நாங்கள் குடிபுகுந்த வீடு இன்று பாரதியார் தெரு என்று அழைக்கப்படும் தெருவில், பாரதி தன் குடும்பத்துடன் சிறிது காலம் வாழ்ந்த வீடு.
என் பயணம் அங்கிருந்துதான் தொடங்கியது. என் ஊர்வலம் அங்கிருந்துதான் ஆரம்பித்தது.



