You are herePonniyin Selvan Varalaatru Peruvizha Souvenir 2009 / ஆலயம் தொழுவது சாலவும் நன்று - ம. இராமநாத்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று - ம. இராமநாத்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
ம. இராமநாத்
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஆன்றோர் வாக்கு.
இந்த மூதுரையை அனைத்து மக்களும் தங்கள் மணங்களில் ஆழ்ந்து விதைத்து எதிர்கால சந்ததியினர் வளமாக வாழவேண்டும் என்பதற்காகவும் ஆலயங்களை அமைத்தனர்.
இந்த அடிப்படை எண்ணங்களே பிற்காலத்து அரசர்களின் திருப்பணிகளுக்கு அடித்தலமாக அமைந்தன.
அரசர்கள் தாம் வழிபடுவதற்கு மற்றுமன்று மக்களும் வழிபடுவதற்காக கோயில்களை கட்டினார்கள். கோயில்கள் இறைவனை தொழுவதற்கான இடமாக மட்டுமல்லாமல் அனைத்து சமுதாய மற்றும் அரச விழாக்கள் நடைபெறும் இடங்களாகவும் திகழ்ந்தன.
பல்லவர் காலத்தில் பெரும்பாலான கோயில்கள் பாறைகளை குடைந்தும், மண், சுண்ணாம்பு மற்றும் செங்கற்களை வைத்தும் கட்டப்பட்டன.
பிற்காலத்தில் தான் கோவில்கள் முழுமையாக கற்றளிகளாக மாறின.
பல கோவில்களை கற்றளியாக்கிய பெருமை சோழர்களை அதிகம் சாரும்.
புல்லினால் கோடியாண்டு
புதுமண்ணால் பத்துகோடி
செங்கல்லால் நூறுகோடி
செம்மையாம் சிந்தையோடு
கல்லினால் புதுக்கினார்கள்
கயிலை விட்டு அகலார் தாமே
- என்பது மேலார்வாக்கு.
இந்த வரிகள் அரசர்களையும் மற்றவர்களையும் பெரிதாக தாக்கியிருக்க வேண்டும்.
இந்த அடிப்படை எண்ணங்களின் காரணமாகத்தான் நாம் இன்று காணும் பல பெரிய கோயில்கள் உருவாக்கப்பட்டு அவை பழம் பெரும் புதையல்களாகவும், வரலாற்று சின்னங்களாகவும் நமக்கு திகழ்கின்றன.
இப்படி அமைக்கப்பட்ட ஆலயங்கள் செழுமையாக இருக்கவேண்டும் என்பதற்காகவும், அதே நேரத்தில் வழிபாடுகளும், கலைத்தொண்டும் தடைபெறாமல் நடைபெற எண்ணிலாத வகையில் நிவந்தங்களை அரசர்கள் மட்டுமல்லாமல் சாதாரண நிலையில் உள்ள மக்களும் அளித்தனர். முடிந்த வரையில் இவை அனைத்தும் கல்வெட்டுக்களாக பொறிக்கப்பட்டு நமக்கு அன்றைய கால நிலை மற்றும் நடப்புகளை கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகிறது.
அப்படிப்பட்ட அரும்பெரும் திருத்தலங்களில் ஒன்றுதான் சென்னையிலிருந்து 80 கி.மீ. தெற்கே தேசிய நெடுந்சாலையில் உள்ளது மதுராந்தகம். இதற்கு ரயில் வசதியும் உண்டு.
முதல் பராந்தகன் மகனான கண்டராதித்த சோழரே இத்தலத்திற்கு மதுராந்தகச் சதுர்வேதிமங்கலம் என்ற பெயரைச் சூட்டியுள்ளார். இத்தலத்து இறைவன் திருவெண்காடுடைய மகாதேவர் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றார்.
மதுராந்தகம் பெயர் காரணம் :
மதுரை + அந்தகன் = மதுராந்தகன்
முதலாம் பராந்தகன் (கி.பி. 907 - 955 ) மதுரை மீது படையெடுத்து சென்று பாண்டியர்களை வென்றதால் "மதுரை கொண்ட கோப்பர கேசரிவர்மன்" என்று அழைக்கப்பட்டான். சோழ அரசர்களே நான்கு வேதங்களை ஓதும் அந்தணர்க்குத் இந்த ஊரை தானமாக வழங்கியதால் இந்நகர்க்கு "மதுராந்தகச் சதுர்வேதிமங்கலம்" என்று கல்வெட்டுக் குறிப்பு காணப்படுகிறது.
கோவிலின் அமைப்பு :
கிழக்கு நோக்கிய நிலையில் கோவிலின் ஐந்து நிலைகளை உடைய ராஜ கோபுரம் அமைந்துள்ளது.
ஐந்து நிலை ராஜகோபுரம், அழகிய திருக்குளம், கோயிலைச் சுற்றி மாடவீதி, கோயிலைச் சுற்றி நந்தவனம், அந்தணர்கள் மற்றும் கோயில்களுக்காக தங்களை அர்ப்பணித்த அனைவரும் வாழ இடங்கள், சிற்ப ஆகம சாத்திரங்கள் கூறிடும் விதிமுறைகளின்படி உருவாக்கியுள்ள வெண்காட்டீஸ்வரர் திருக்கோயிலினுள்ளே நுழைகிறோம். பலிபீடம் , கொடிமரம் , நந்திதேவர்... !
இங்கே நாம் காணும் பலிபீடமே சற்று பரந்து, விரிந்து, உயரமான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பும் இத்திருக்கோயிலின் தொன்மைக்குச்சான்று கூறுவதாகும். சிகரத்துடன் கூடிய கோபுர வடிவில், நுண்ணிய சிற்ப வேலைப் பாடுகளுடன் அது அமைந்துள்ளது. அதனையும் மிஞ்சிடும் வகையில் நந்திதேவர் அமர்ந்துள்ளார். அவருடைய கழுத்தில் காணப்படும் மணிமாலைகள், உள்ளங்கால்களை மடக்கிய நிலையில் அமர்ந்த நந்திதேவர் அவ்வளவு அழகு!
கோவில் வெளிச்சுற்று, உள்சுற்று என பல சுற்றுக்களை உடையதாக அமைந்துள்ளது. கோயிலின் தென்மேற்கு மூலையில் நடன கணபதி காட்சி தருகிறார். கோயிலை வலம் வந்து நந்திதேவரை தாண்டி நாம் உள்ளே நுழைந்தால் பெரும் தூண்களை உடைய வெளி மண்டபமும், மண்டபத்தில் நமக்கு வலப்புறமாக கோயிலின் நாயகியாம் மீனாட்சியம்மை நமக்கு காட்சியளிக்கிறாள். சரி, இறைவனை தரிசித்துவிட்டு வந்து இறைவியை மேலும் காண்போம்.
வெளி மண்டபத்தை கடந்து சென்றால், பழங்காலக்கற்களை கொண்டு கட்டப்பட்ட உள்திருச்சுற்று மண்டபத்தை அடைகிறோம்.
உள்திருச்சுற்றிலும் நாம் ஒரு நந்திதேவரை காண்கிறோம்.உள்திருச்சுற்றை கடந்து உள்ளே சென்றால் துவாரபாலகர்கள் உருட்டும் விழிகளுடன், இறைவனின் தவத்தை கலைக்காமல் தரிசித்து விட்டு வரும் படி நம்மை மிரட்டுகின்றனர்.
அருள்மிகு திருவெண்காடுடைய நாயனார் எனப்படும் திருவெண்காடுடைய மகாதேவர் நம்மை அன்புடன் வரவேற்று அருள்பாலிக்கிறார்.
இறைவனை தரிசித்துவிட்டு நாம் திரும்பும் பொழுது,கருவறை மண்டபத்திலேயே, நமக்கு வலப்புறமாக அடைக்கப்பட்ட நிலையில் ஒரு சுரங்கபாதை உள்ளது. ஆடல் வல்லான் சிலையும், விநாயகர், முருகர் மற்றும் கிராம உற்சவ தேவதைகள் என அனைத்து உற்சவ மூர்த்திகளும், கலைநயத்துடன் கூடிய விலைமதிப்பற்ற பஞ்ச லோகமத்தில் காட்சி தருகின்றனர்.
இறைவனை தரிசித்துவிட்டு உள்திருச்சுற்றை சுற்றி வந்தால் நாம் முதலில் காண்பது சமயக்குறவர் நால்வரை. அவர்களை கடந்து செல்ல, இங்கு நாம் காண்பது கோஷ்ட தெய்வங்களாக அமர்ந்துள்ள கணபதி, தட்சிணாமூர்த்தி, திருமால், நான்முகன் மற்றும் விஷ்ணு துர்கை.
உள்திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் கணபதியும், வடமேற்கு மூலையில் வள்ளி தெய்வயானையுடன் சேனாதிபதியாக என்றும் இளமையுடன் திகழும், மயில் வாகனத்தில் ஆறுமுகம் கொண்ட முருகனும் உள்ளனர்.
முருகனை கடந்து சென்று சண்டிகேஸ்வரரை காண்கிறோம். சண்டிகேஸ்வரருக்கு அருகிலேயே கோயிலின் திருக்கிணறும் அமைந்துள்ளது.
இங்கு உள்ள சண்டிகேஸ்வரர் சந்நிதியில் உற்று உள்நோக்கினால் சண்டிகேஸ்வரருக்கு வலது புறத்தில் சோம கணபதி உள்ளனர்.
இந்த கோவிலில் உள்ள சோமாஸ்கந்தனும், சோம கணபதியும் பல்லவர் காலத்து கலை நுட்பங்களை தாங்கி விளங்குகிறது என்பது அறிஞர்கள் கருத்து. இங்கு காணப்படும் சோமாஸ்கந்தரில் பொதுவாக எல்லா இடங்களிலும் காணப்படும் விஷ்ணுவும், பிரம்மாவும் காணப்படவில்லை. இவை நமக்குள்ளே ஒரு பெரிய கேள்வியை எழுப்புகின்றன. ஏன் இங்கு விஷ்ணுவும், பிரம்மாவும் இல்லை? முதலில் சோமாஸ்கந்தர் இப்படித் தான் வடிவமைக்கப்பட்டனரோ? அல்லது சிற்பியின் கற்பனையோ!!!
சண்டிகேஸ்வரரை கடந்துவர வட கிழக்கு மூலையில் பைரவர்கள் காணப்படுகின்றனர். பொதுவாக கோயில்களில் ஒரு பைரவர் மட்டுமே காணப்படுவதற்கு பதிலாக இங்கு
1. கால பைரவர்
2. உன்மத்த பைரவர்
3. அசிதாங்க பைரவர்
4. ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்
என நான்கு பைரவர்கள் காணப்படுகின்றனர். இது இத்தலத்தின் மற்றுமொரு சிறப்பு.
நான்கு பைரவர்களுக்கு அருகில் மற்றுமொரு சண்டேச நாயனார் காட்சியளிக்கிறார்.
மேலும், சூரியன் இறைவனை நோக்கிய வண்ணம் உள் வாயில் நிலைகளுக்கு அருகில் காட்சியளிக்கின்றார்.
இங்கு உள்ள அனைத்து சிற்பங்களும் கலை நயம் மிக்கவையாக இருக்கின்றன.
உள்திருச்சுற்றை தாண்டி நாம் மீண்டும் வெளித்திருச்சுற்றுக்கு வருவோம். வெளித்திருச்சுற்றில் தனி சந்நிதியில் திருக்காமக்கோட்டமாக கருதப்படும் இடத்தில் இறைவி மீனாட்சி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள்.
இறைவியை தரிசித்துவிட்டு நாம் சுற்றி வர முதலில் நம்மை தடுத்தாட்கொள்பவர் ஸ்ரீ பாண்டீஸ்வரரும் அவருக்கு அருகில் உள்ள புவனாபதி நாச்சியாருமே. அவர்களை கடந்துவர, நவக்கிரக சந்நிதியை காணலாம். சமீபத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் பொழுது இந்த சந்நிதியை இராச கோபுரத்திற்கு அருகில் மாற்றி அமைத்துள்ளனர்.
கோயிலின் வெளித்திருச்சுற்றை மீண்டும் ஒருமுறை சுற்றிப்பார்க்க தென்கிழக்கு மூலையில் இறைவனுக்கு திருவமுது படைக்க மிகப்பெரிய மடைப்பள்ளி அமைந்துள்ளது.
வடகிழக்கு பகுதியில் வாகன மண்டபமும், யாக சாலையும் உள்ளது. வாகன மண்டபத்தையும் அழகுடன் காட்ட மண்டபத்தின் கபோதங்களுக்கு மேலே வாத்து வரி அமைந்துள்ளது.
கோயில் ஒரு சிறுகுறிப்பு :
இடம் : மதுராந்தகம். சென்னையில் இருந்து 80 கி.மீ. தொலைவில் தெற்கு நோக்கி உள்ளது.
இறைவன் : அருள்மிகு வெண்காட்டீஸ்வரர்
இறைவி : அருள்மிகு மீனாட்சியம்மன்
கல்வெட்டுப் பெயர் குறிப்புகள்
இறைவனின் பெயர்கள் : ஆளுடையார் திருவெண்காடுடைய நாயனார் மற்றும் திருவெண்காடுடைய மகாதேவர்
ஊர் பெயர் : தநியூர் ஸ்ரீ மதுராந்தகத்து சதுர் வேதி மங்கலம்.
நீர் நிலை : கோவிலின் எதிரில் உள்ள குளம் "விஷஹர தீர்த்தம்". இது சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்டது. பங்குனி உத்திரத்தில் இறைவனுக்கு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.
ஏரி : வீர சோழப்பேரேரி
தலவிருட்சம் : கொக்கு மந்தாரை.
கல்வெட்டு மொழி : தமிழ்
கல்வெட்டு குறிப்புகள் :
முதல் பராந்தக சோழன் (கி.பி. 907 - 955)
கண்டராதித்த சோழன் (கி.பி. 947 - 957)
சுந்தரசோழன் (கி.பி. 957 - 974)
முதல்ராசராசன் (கி.பி. 985 - 1014 - இரண்டு கல்வெட்டு)
விக்கிரமசோழன் ( மூன்று கல்வெட்டுகள் )
முதல் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 - 1120 - ஏழு கல்வெட்டுகள்)
இரண்டாம் இராசராசசோழன் (கி.பி. 1146 - 1166 - மூன்று கல்வெட்டுகள்)
இரண்டாம் இராசாதிராசசோழன் (கி.பி. 1166 - 1180 - ஒன்று)
மூன்றாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1178 - 1218 - மூன்று கல்வெட்டுகள்)
மூன்றாம் ராசராசன் (கி.பி. 1216 - 1257 - இரண்டு கல்வெட்டுகள்)
மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி. 1268 - 1318)
கோனேரின்மை கொண்டான் மாறவர்மன்
விக்ரம பாண்டியன் (கி.பி. 1323 - 1330 )
விசயநகரப் பேரரசன் வீரப்பிரபுடதேவராயன் (கி.பி. 1448)
வெங்கடராயன் எட்டூர் திருமலை குமாரதாதாச் சாரியார் (கி.பி. 1586 - 1614)
ஆகியோர் காலத்திய கல்வெட்டுகளைப் (27) இதுவரை படியெடுத்திருக்கின்றனர்.
வைகாசி விசாகப் பெருவிழா, பங்குனி உத்திரம் :
முதலாம் இராசராசன் ஆட்சிக்காலத்தில்,(கி.பி. 989) வைகாசி விசாகப் பெருவிழா, நடைபெற்றிருக்கிறது. கோவிலைச்சுற்றி மாடவீதிகள் அமைத்து, 'திருவெண்காட்டுப் பெருந்தெரு' என பெயரிட்டு, அதில் சிவபிராமணர்கள், உவச்சர்கள், தவசிகள், தேவரடியார்கள் ஆகியோர்களைக் குடியேற்றினர்.
முதல் குலோத்துங்கன் ஆட்சியில் (கி.பி. 1076) மதுராந்தக மூவேந்த வேளான் என்பவன், கோவில் நந்தவனம் அமைத்துள்ளான்.
கி.பி. 1099-ல் முதல் குலோத்துங்கன் ஆட்சியில் ஓய்மாநாட்டுப் பேராயூர் நாட்டு (தற்போதுள்ள பேராவூர்) உலக மாதேவிபுரத்து (தற்போதுள்ள ஒலகாபுரம்) வியாபாரி ஆர்வலங்கிழான் கம்பன் திருவூறல் என்பவன் கோயிலில் திருநந்தா விளக்கு ஒன்று வைக்க 90 ஆடுகள் கொடுத்துள்ளான்.
முதல் குலோத்துங்கனின் ஆட்சிக்காலத்தில் (கி.பி.1103) வீரநாராயணமூவேந்த வேளானான தில்லையாளி என்பவன் இக்கோயிலுக்கு வரும் சிவ யோகிகளுக்கும் தவசிகளுக்கும் உணவளிக்க இருபது* பாடகம் (தளை) நிலம் கொடையாக அளித்துள்ளான்.
*50 சென்டு = ஓரு தளை
அக்காலத்தில் செய்யூரில் வாழ்ந்த "பெரியாள்" என்னும் கோயில் பணிப்பெண் இக்கோயிலுக்கு திருநந்தா விளக்கு வைக்க தொண்ணுற்றாறு ஆடுகளைக் கொடுத்துள்ளாள்.
முதல் குலோத்துங்கனின் 47-ஆவது ஆட்சியாண்டில் (கி.பி. 1117) சோழநாட்டைச் சேர்ந்த புதுவை ஊரிலுள்ள இராசேந்திரசோழ பழந்திராயனான பன்றிகயிலாயன் ஒரு நந்தா விளக்கெரிக்க 95 ஆடுகளை தானம் அளித்தான். பள்ளி செங்கேணி சாத்தன், சோழனான வாணராயன் என்பவன் திண்டிவனம் வட்டம் முன்னுரில் வாழ்ந்த பள்ளி மரபினன். இவனே இக்கோயிலை கி.பி. 1085ல் கற்கோயிலாகக் கட்டியவன் என குறிக்கப்பட்டுள்ளது.
திரிபுவன வீர சம்புவரையன், மூன்றாம் இராசராசனின் 14ஆவது ஆட்சியாண்டில் (கி.பி. 1230) பங்குனி விழா எடுக்க மணியன்பட்டி என்னும் ஊரில் 15 வேலி நிலம் கொடையளித்தான்.
மூன்றாம் இராசராசன் ஆட்சியின்போது பள்ளி செங்கேணி குடியில் வந்த பல்லவாண்டார் எதிரிலிச் சோழசம்புவராயர் மகன் அழகிய சீயன் என்னும் அழகிய சோழச் சம்புவரையன் நந்தாவிளக்கு எரிக்க 91 ஆடுகள் கொடுத்துள்ளான்.
மதுராந்தகம் வட்டம் புத்தகத்துறையில் வாழ்ந்த அகனளங்க சம்புவரையன், இக்கோயிலுக்கு விளக்கு எரிக்க புவனமுழுதுடைய பெருந்தெருவில் வாழ்ந்த வணிகர்களிடம் 12 காசுகள் கொடுத்தான்.
இவ்வூரில் தீனசிந்தா மணிப்பெருந்தெருவில் வாழ்ந்த வணிகர்கள், இக்கோயிலின் கருவூலத்திலிருந்து 300 பழங்காசு பெற்றுக்கொண்டு, கோயில் மூர்த்திகளின் மேல்பூசும் வாசனை திரவியங்கள் அளிக்க ஒப்புக்கொண்டு செய்து வந்தனர்.
கி.பி. 1194-ல் புலியூர் கோட்டமான குலோத்துங்க சோழ வளநாட்டு திருச்சரத்து, குலோத்துங்க சோழ கண்ணப்பன். தூசி ஆதிநாயகன் பஞ்ச நெதிவாரனான இராசராச நீலங்கரையன் என்பவன் முப்பத்திரண்டு பசுக்களும், ஒரு ரிஷபமும் கொடையாக அளித்தான்.
சமீபத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் பொழுது கூட, நடைமுறைக்கு எதிராக, கல்வெட்டுகளின் மீது வண்ணம் பூசாமல், அதை தூய்மை படுத்தியுள்ளனர். இது மிகவும் பாராட்டுக்குரியது.
பெற்ற தாய்க்கு சமமான, இத்தனை சிறப்புடைய இந்த ஊரில் தான் நானும் பிறந்து வளர்ந்தேன். இது பெருமையன்றோ.



