அந்திமாலையும் அவளும் அவனும்
 • நண்பர்களே! இது ஸ்ரீகிருஷ்ணதேவராயன் ‘அமுக்தமால்யதா’ எனும் காவியம் எழுதும்
  பணியில் ஈடுபட முனைந்த கதை. அவன் இதற்காக தன் குருவான திம்மராசுவை
  கலந்தோலோசிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் செல்கிறான்.. அப்போது நடக்கும் ஒரு
  சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதை மூன்று பகுதிகளாக வல்லமையில்
  எழுதப்படுகிறது.. இதோ முதல் பகுதி..

  அந்திமாலையும் அவளும் அவனும்-1
  திவாகர்

  “நீ யாருடைய பெண்ணம்மா.. திம்மராசு மாமா ஆட்சிப் பொறுப்புகளிலிருந்தெல்லாம்
  ஒதுங்கி விஜயநகரத்தை விட்டு விரும்பி வில்லிப்புத்தூரில் வந்து மூன்று
  ஆண்டுகள் ஆகிவிட்டாலும் குடும்பத்தார் அத்தனைபேரும் தலைநகரில்தானே
  இருக்கிறார்கள்.. பெரியபெண் நர்மதையின் பெண்ணா.. சிறியவள் கிருஷ்ணையின்
  பெண்ணா? உன் பெற்றவர்கள் அனைவரும் என்னிடம் பூரண அன்பு கொண்டவர்கள் என்பது
  உனக்குப் புரியுமோ புரியாதோ.. ஆனால் மாமா இங்கு வந்துவிட்டபின்னர் உன்
  குடும்பங்களோடு கொஞ்சம் தொடர்பு விட்டுப் போனது வாஸ்தவம்தான்.. சொல்லம்மா..
  உன் பெயர் என்ன..”

  அவள் மெல்லச் சிரித்தாள்.. “என் பெயர் எல்லாம் உனக்கெதற்கு.. என் தாத்தாவிடம்
  கோள் மூட்டப் போகிறாயா?.. அவர் என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும்
  நம்பமாட்டார்.. தங்கநிகர் நெஞ்சம் கொண்டவர், அது தரணிக்கே தெரியும்”

  “அட.. என் செல்லப் பெண்ணே.. உன்னைப் பற்றி நான் ஏன் கோள் சொல்லப்போகிறேன்..
  ஆஹா.. உன் தமிழ் அருமை.. எங்கே கற்றாய்..”

  “இங்கேதான்..தமிழ் பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு விட்டு தமிழ் கற்க விஜயநகரம்
  வரை வரவேண்டுமா என்ன?”

  “இல்லை.. தேவையில்லை.. உன் வார்த்தைகள் என்னை மயக்குகிறது.. சரி, பகல்
  முடியப்போகிறதே.. செல்வோம் வா..”

  “ஊம்ஹும்.. நான் உன்னுடன் வரமாட்டேன்.. நீ போ.. பிறகு வருகிறேன்.. தாத்தா
  பார்த்தால் உடனே கோபித்துக் கொள்வார்”

  “இல்லை.. நான் சொல்லிக்கொள்கிறேன்.. நான் சொன்னால் உன் பாட்டன் எதையும்
  கேட்பார்..”

  “அது இன்னும் பயம்.. நீ இல்லாததும் பொல்லாததும் ஏதேனும் சொன்னால்?”

  அவள் பயப்படுவது போல பார்த்தாள்.. இல்லை இவள் பயங்கொண்டவளாகத் தெரியவில்லை..
  பாட்டனுக்கு ஏற்ற பேத்திதான்..

  “சரி.. எத்தனைநேரம் இந்த ஆளில்லா சாலையில் இப்படியே ஆகாயத்தைப்
  பார்த்துக்கொண்டிருப்பாய்?”


  அவள் சிரித்தாள் “அட, சரியாகச் சொல்லிவிட்டாயே! ஆமாம்.. ஆகாயத்தைப் பார்க்க
  நான் எப்போதும் இங்கே வருவேன்.. இந்தப் பாறைதான் நான் எப்போதும் நிற்கும்
  இடம்.. இங்கிருந்து ஆகாயத்தைப் பார்ப்பது என் வழக்கம்..நீ எப்போதாவது
  ஆகாயத்தைப் பார்த்திருக்கிறாயா? அங்கே அதிசயம் நிறைய இருக்கும் என்றாவது
  உனக்குத் தெரியுமா?”

  பாறை மேல் நின்று அந்த ஆகாய நிலா சொன்ன வார்த்தைகளைக் கேட்டதுமே சட்டென
  சற்றுத் திகைத்துதான் போனான் அவன்.. சென்ற மாதத்து துவாதசி நாளன்று காலைதான்
  ஆகாயத்தில் பார்த்ததும் அங்கே கண்ட காட்சியும் இவளிடத்தில் சொன்னால்
  நம்புவாளா.. இல்லை இவளுக்கு அதன் உன்னதம் தெரியுமா.. அதைப் பற்றிப் பேசத்தான்
  பிரத்யேகமாக திம்மராசு மாமாவிடம் செல்கிறோமென்று இவளுக்கு எப்படிச்
  சொல்வேன்..ஆண்டவா.. ஏன் இந்த திம்மராசு மாமாவின் பேத்தி என்னை இப்படிப் பாடாய்
  படுத்துகிறாள்.. இவள் யாரெனத் தெரிந்தும் இவளை இப்படியே விட்டு விட முடியுமா..
  ஐய்யோ.. முடியாதுதான் சிறு பெண்.. இவள் வழியாகச் சென்றுதான் இவளை அழைத்துச்
  செல்ல வேண்டும்..

  “சரி.. நீ எத்தனை நேரம் இங்கு இருப்பாயோ நானும் அத்தனை நேரம் இங்கு
  இருப்பேன்..”

  “பசிக்குமே”

  “உனக்குப் பசிக்காதோ?”

  ”நான் இப்போதுதான் தாத்தா குடிசையில் சட்டியில் கிடந்த அமுதை அப்படியேக்
  குடித்து விட்டு ஓடி வந்துவிட்டேன்.. பாவம் தாத்தாவுக்குதான் பசிக்கும்..”

  *(மேலும் படங்களுடன் படிக்க, இந்தச் சுட்டியை சொடுக்கவும்*
  http://www.vallamai.com/literature/serial/30621/


  அன்புடன்

  திவாகர்

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters