Y Ambedkar Converted to Buddhism - 1
  • புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? - 1
    ம வெங்கடேசன்
    5 May 2011 | அச்சிட
    1935 அக்டோபர் 13.
    இயோலாவில் அந்த மாபெரும் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
    கட்டுக்கடங்காத கூட்டம்.
    அம்பேத்கர் தங்களுக்கு என்ன சொல்லப் போகிறார் என்று அந்த கூட்டமே
    உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தது.
    மேடையில் உட்கார்ந்திருந்த அம்பேத்கரின் மனதில் பலவித எண்ணங்கள்
    அலைமோதின.
    தான் எவ்வளவுதான் இந்துமதத்தில் இருந்துகொண்டு போராடினாலும் இந்த
    உயர்சாதி மக்கள் திருந்தப்போவதில்லை. தீண்டாமை கொடுமை ஒழியப்போவதில்லை.
    இந்து மதத்தில் இருக்கும்வரை என் மக்கள் தீண்டப்படாதவர்களாகவேதான் வாழப் போகிறார்கள்; சாகப்போகிறார்கள்.
    தீண்டாமை அடிமை விலங்கிலிருந்து தன்னை நம்பியிருக்கும் இந்த மக்களை
    கண்டிப்பாக விடுவித்தே தீரவேண்டும். அதற்குச் செய்ய வேண்டியது என்ன?
    தாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி பலநாள் ஆழ்ந்து யோசித்து
    வைத்திருந்த முடிவை தம் மக்களின் மனங்களில் விதைத்திட
    தீர்மானித்துவிட்டார்.
    பலர் பேசியபின் அம்பேத்கர் எழுந்தார்.
    கட்டுக்கடங்காத கூட்டத்தைப் பார்த்தார்.
    தான் பேசப்போகும் பேச்சு அகில இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கும் என்று
    அவருக்குத் தெரிந்தே இருந்தது. பேச ஆரம்பித்தார்.
    “நான் ஏதோ தீயவாய்ப்பால் ஒரு இந்துவாகப் பிறந்துவிட்டேன். அதை தடுத்தல்
    என் கையில் இல்லை. அதனால் பல இன்னல்களையும் இழிவுகளையும் எதிர்கொள்ள
    நேர்ந்தது. ஆனால், நான் ஓர் இந்துவாக இறக்க மாட்டேன் என்பது மிக உறுதி’’.
    அம்பேத்கரின் இந்த அறிவிப்பு தாழ்த்தப்பட்டவர்களின் உள்ளக்குமுறலை
    வெளிப்படுத்தும் அறிவிப்பு. கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் விண்ணதிர கரவொலி எழுப்பி தங்களின் சம்மதத்தை தெரிவித்தார்கள்.
    இந்த அறிவிப்பு நிச்சயமாக பார்ப்பனர் மற்றும் உயர்த்தப்பட்ட சாதி
    இந்துக்களின் மனங்களை உலுக்கும் என்று அம்பேத்கர் எதிர்பார்த்தார். ஆனால், அம்பேத்கரின் இந்த அறிவிப்பால் உயர்த்தப்பட்ட சாதி இந்துக்கள் மனம்
    மாறவில்லை. மாறாக பார்ப்பனர் பலர் மகிழ்ச்சியடையவே செய்தனர். சீர்த்திருத்த எண்ணம் கொண்ட சில இந்துக்கள் மட்டுமே கவலைப்பட்டனர்.
    அம்பேத்கரின் இந்த அறிவிப்பைக் குறித்து அக்டோபர் 15ம் தேதி காந்தி தனது கருத்தை வெளியிட்டார். அதை மறுத்து அம்பேத்கர் ‘‘நாங்கள் எந்த சமயத்தில்
    [வேறு மதத்தில்] இணையப்போகிறோம் என்பது குறித்து முடிவு ஏதும்
    எடுக்கவில்லை. எந்தெந்த வழிமுறைகளைக் கடைபிடிக்கப்போகிறோம் என்பதையும்
    முடிவு செய்யவில்லை. ஆனால், நாங்கள் தீர்க்கமாய் கலந்து ஆலோசித்து உறுதியாக முடிவு செய்திருப்பது ஒன்றுதான். அதாவது இந்து சமயத்தினால் எங்களுக்கு
    நலன் ஏதும் கிடையாது என்பதே’’ என்று பதில் அளித்தார்.
    இப்படி அம்பேத்கர் தீர்க்கமாய் முடிவெடுத்ததுக்கு என்ன காரணம்?
    அம்பேத்கரின் சிறுவயது முதல் நடந்த சில நிகழ்ச்சிகளே காரணம்.
    இது அம்பேத்கரின் சிறுவயதில் நடந்த நிகழ்ச்சி.
    ஒருமுறை ஆசிரியர் அம்பேத்கரை வடிவியல் கணிதத்தில் (ஜியோமிதி) ஒரு
    விதியைக் கரும்பலகையில் நிரூபித்து எழுதிக் காட்டுமாறு அழைத்தார். உடனே
    மற்ற எல்லா மாணவர்களும் கூச்சல்போட்டுக் கரும்பலகை அருகே வைக்கப்பட்டிருந்த தங்கள் உணவுப் பாத்திரங்களை அகற்றிவிட்டனர். அப்பொழுதுதான் அவை
    தீட்டாகாமலிருக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். அதன் பிறகே அம்பேத்கர்
    கரும்பலகை அருகே சென்று, அந்த விதிமுறையை நிரூபித்துக்காட்ட முடிந்தது.
    ஒருநாள் பொதுக் குடிநீர் நிலையில் எவருக்கும் தெரியாமல் நீர்
    அருந்தினார். இவர் தண்ணீர் குடித்ததைக் கண்டுபிடித்து விட்டனர். நாங்கள்
    குடிநீர் எடுக்கும் இடத்தில் தீண்டாதவனாகிய நீ எப்படி நீர் அருந்தலாம்
    என்று கேட்டு அவரை நையப்புடைத்தனர்.
    அதேபோல் அவர் படித்த பள்ளியில் ஆசிரியர் ஒருவர் தீண்டாதவனாகிய ‘நீ
    படிப்பது வீண்’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். இது அம்பேத்கரை
    எரிச்சலூட்டியது. ஒருநாள் வழக்கம்போல் அந்த ஆசிரியர் ‘நீ படிப்பது
    பயனற்றது’ என்று சொன்னபோது அம்பேத்கர் சினத்துடன் “உங்கள் வேலையை நீங்கள்
    பார்த்துக்கொண்டு போங்கள்” என்று கூறினார்.
    சைடன்ஹாம் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தபோது பேராசிரியர்களுக்கென வைக்கப்பட்டிருந்த குடிநீர்ப் பானையிலிருந்து அம்பேத்கர் தண்ணீர்
    குடிப்பதற்குக் குசராத்திப் பேராசிரியர்கள் சிலர் எதிர்ப்புத்
    தெரிவித்தனர்.
    அம்பேத்கர் வழக்கறிஞராக செயல்பட்டபோது மூத்த வழக்கறிஞர்கள் தம்
    நிலையிலிருந்து கீழிறங்கிவந்து தொழில் முறையில் இவரோடு தொடர்புகொண்டு உதவிட முன்வரவில்லை.
    இத்தகைய அவமானம் தரும் சம்பவங்களால் அம்பேத்கரின் உள்ளம் என்ன
    வேதனைபட்டிருக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.
    இந்த சம்பவங்கள் அல்லாமல் அவரை மிகவும் வேதனைப்படுத்திய நிகழ்ச்சிகளை
    நான் விவரிப்பதைவிட வேதனைகளை அனுபவித்த அம்பேத்கரே சொன்னால் இன்னும்
    வலிமையாக இருக்கும்.
    1936 மே 17, ஞாயிற்றுக் கிழமையன்று தாணா மாவட்டத்தின் கிழக்கு
    தெற்குப்பகுதிகளைச் சேர்ந்த தீண்டப்படாதவர்களின் பெரும் மாநாடு கல்யாண்
    எனும் இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமயமாற்றம் குறித்த அறிவிப்பை வெளிப்படையாகத் தெரிவிப்பதற்காக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் தலைமையில்
    இம்மாநாடு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அம்மாநாட்டில்தான் அம்பேத்கர்
    தான் இந்துமதத்தில் இருக்கப்போவதில்லை என்று முடிவெடுத்ததுக்கான காரணத்தை
    விரிவாக பேசினார்.
    இனி அம்பேத்கர் பேசுவார்….
    சமய மாற்றம் குறித்த எனது கருத்துக்களைக் கேட்பதற்காக
    நீங்களெல்லாம் இங்கே கூடியிருக்கின்றீர்கள். எனவே அப்பொருளைக் குறித்து
    விரிவான விளக்கம் அளித்தல் அவசியம் என்று நான் கருதுகிறேன்.
    >‘‘நாம் ஏன் சமயம் மாற வேண்டும்?’’ எனும் வினாவைச் சிலர் அடிக்கடி
    எழுப்பி வருகின்றனர். ‘‘நாம் ஏன் சமயம் மாறக்கூடாது?’’ என்று எதிர் வினா
    எழுப்பத்தான் எனக்கு உந்துதல் தோன்றுகிறது.
    >சமய மாற்றம் ஏன் தேவை என்பதைச்சுட்டும் வகையில் எனது வாழ்க்கை
    நிகழ்ச்சிகள் சிலவற்றை உங்கள் முன் எடுத்துரைக்க விரும்புகிறேன்.
    சமயமாற்றம் எனும் பாதையை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன் என்பதை உங்களுக்கு
    எளிதில் உணர்த்த அது உதவும். மேலும் உங்களில் பலரின் வாழ்க்கையிலும்
    அத்தகைய நிகழ்ச்சிகள் நடந்திருக்கும் என்பது உறுதி.
    >நான்கைந்து நிகழ்ச்சிகள் எனது உள்ளத்தில் ஆழமான வடுக்களை
    விளைவித்துள்ளன; இந்து சமயத்தைத் துறந்து வேறு ஏதாவது சமயத்திற்கு மாற
    வேண்டும் என்ற ஆழமான உணர்வை அவை தோற்றுவித்தன. அவற்றுள் இரண்டு மூன்று
    நிகழ்ச்சிகளை இன்று உங்களிடையே எடுத்துரைக்க விரும்புகிறேன்.
    >இந்தூர் மாவட்டம் மோப் எனும் ஊரில் எனது தந்தை போர்ப்படையில்
    பணியாற்றிக் கொண்டிருந்த போது நான் பிறந்தேன். அப்போது எனது தந்தை
    சுபேதாராக இருந்தார். படை வீரர்கள் குடியிருப்பில் நாங்கள் அப்போது வசித்து வந்தோமாதலால் எங்களுக்கு வெளியுலகத் தொடர்பு அவ்வளவாகக் கிடையாது.
    தீண்டாமையை அச்சமயத்தில் நான் அறிந்திலேன்.
    >எனது தந்தை பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியத்தில் வாழத் தொடங்கிய
    போது நாங்கள் சாதாராவுக்குக் குடிபெயர்ந்தோம். எனக்கு ஐந்து வயதான போது
    எனது தாய் காலமாகிவிட்டார். சாதாரா மாவட்டம் கோராகானில் பஞ்சம்
    தலைவிரித்தாடியபோது அதை சமாளிக்க அரசு தொடங்கிய பஞ்ச நிவாரணப் பணித்
    திட்டத்தில் எனது தந்தைக்கு வேலை கிடைத்தது. அங்கு குளம் வெட்டும் பணி
    தொடங்கப்பட்டு, குளம் வெட்டும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குகின்ற
    பணியில் எனது தந்தை சேர்ந்திருந்தார்.
    >கோரேகான் தொழிலாளர் குடியிருப்பில் எனது தந்தை தங்க நேர்ந்ததால்
    நாங்கள், குழந்தைகள் நால்வரும், சாதாராவில் தனித்துவிடப்பட்டோம். அங்கு
    நாங்கள் நாலைந்து ஆண்டுகள் சோறு மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து
    கொண்டிருந்தோம். சாதாராவிற்கு வந்த பின்னர் தான் தீண்டாமை என்பதை நாங்கள்
    அனுபவிக்கத் தொடங்கினோம்.
    >எனக்கு முதல் தாக்கமாய் அமைந்தது நாவிதர் எவரும் எங்களுக்கு முடி வெட்ட
    வராமையே. இது எங்களை மிகவும் பாதித்தது. இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் எனது அக்காதான் வீட்டுக்கு எதிரேயிருந்த திட்டு ஒன்றில் என்னை அமர்த்தி
    எனக்கு முடிவெட்டிவிடுவார்.  ஊரில் ஏராளமான நாவிதர்கள் இருந்தும் ஏன்
    ஒருவரும் எனக்கு முடிவெட்ட முன்வரவில்லை என்பது எனக்குப் புரியாத புதிராகவே இருந்தது.இரண்டாவது நிகழ்ச்சியும் இதே காலகட்டத்தில் நிகழ்ந்தது தான்.
    >எனது தந்தை கோரேகானில் இருந்த போது எங்களுக்கு அடிக்கடி கடிதம்
    எழுதுவார். ஒரு கடிதத்தில் எங்களைக் கோரேகானுக்கு வருமாறு அழைத்திருத்தார். நான் அதுவரை புகைவண்டியையே பார்த்ததில்லையாகையால், கோரேகானுக்குப் புகை
    வண்டியில் செல்லப்போகிறோம் எனும் எண்ணம் எங்களுக்குக் குதூகலமூட்டியது.
    எங்களுக்குத் தந்தை அனுப்பிய பணத்தில் புதிய ஆடைகள் தைத்து, அவற்றை அணிந்து கொண்டு எனது அண்ணன், அக்கா மகள், நான் ஆகிய மூவரும் கோரேகானுக்கு
    கிளம்பினோம்.
    >எங்கள் வருகை குறித்துத் தந்தைக்கு ஓர் கடிதம் எழுதியிருந்தோம். ஆனால்,
    எங்கள் பணியாளின் கவனக்குறைவாலோ, பிழையாலோ அக்கடிதம் போய்ச் சேரவில்லை.
    இதையறியாமல், எனது தந்தை புகைவண்டி நிலையத்திற்கு உறுதியாய்
    வண்டியனுப்பியிருப்பார் என்று நம்பிக்கொண்டு போனோம். வண்டியிலிருந்து
    இறங்கியதும் பணியாளர் எவருமே தென்படாமையால் நாங்கள் மிக அல்லலுற்றோம்.
    >விரைவில் பிற பயணிகள் புறப்பட்டுச்செல்ல பயணியர் மேடையில் நாங்கள்
    மட்டும் தனித்து நின்றோம். இவ்வாறு முக்கால் மணிநேரம் பயனின்றிக் காத்துக்
    கொண்டிருந்தோம். நிலைய அதிகாரி நாங்கள் யாரைக் காணப்போகிறோம், எங்கள் சாதி
    என்ன, நாங்கள் எங்கு செல்ல விரும்புகிறோம் என்றெல்லாம் விசாரித்தார்.
    நாங்கள் மகர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்று அவரிடம் கூறினோம்.
    இதைக்கேட்டதுமே அவர் அதிர்ச்சியடைந்து ஐந்து எட்டுகள் பின்வாங்கினார்.
    >முதலில் எங்கள் நல்லாடைகளைப் பார்த்து நாங்கள் வசதியானதோர்
    குடும்பத்துப் பிள்ளைகள் என எண்ணிக்கொண்டார் போலும். எனினும் எங்களுக்காகக் கட்டை வண்டி ஒன்று ஏற்பாடு செய்வதாய் உறுதியளித்தார்.
    >ஆனால், நாங்கள் மகர்சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் வண்டிக்காரன்
    எவனும் எங்களுக்காக வண்டியோட்ட முன்வரவில்லை. மாலை நேரம் 6 அல்லது 7 மணியை
    நெருங்கிக்கொண்டிருந்தது. இறுதியில் வண்டிக்காரன் ஒருவன் தனது வண்டியில்
    நாங்கள் பயணம் செய்வதற்கு இணங்கினான். ஆனால், எங்களுக்காக அவன் வண்டி
    ஓட்டமாட்டானென்று தொடக்கத்திலேயே தெளிவாகக் கூறி விட்டான்.
    >நாங்கள் ஏற்கெனவே படைவீரர் பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள். ஆதலால்
    வண்டியோட்டுதல் எனக்கொன்றும் சிரமமாய்த் தோன்றவில்லை. எனவே, நாங்கள்
    வண்டியோட்ட ஒப்புக் கொண்டதும் அவன் தனது வண்டியைக் கொண்டு வர நாங்கள் அதில் ஏறிக்கொண்டு கோரேகானுக்குப் புறப்பட்டோம்.
    >ஊருக்கு வெளிப்புறத்தை அடைந்ததும் ஓர் ஓடை தென்பட்டது. அதை விட்டால்
    வேறெங்கும் தண்ணீர் கிடைக்காது என்று கூறி வண்டிக்காரன் அங்கேயே எங்கள்
    உணவை முடித்துக்கொள்ளுமாறு கூறினான். அவ்வாறே நாங்கள் வண்டியை விட்டிறங்கி
    எங்கள் உணவை சாப்பிட்டு முடித்தோம். ஓடை நீர் கலங்கலாயும் சகதி கலந்தும்
    இருந்தது. இதற்கிடையில் வண்டிக்காரன் வேறோரிடத்துக்குச் சென்று தனது உணவை
    முடித்துக்கொண்டு வந்து சேர்ந்தான்.
    >மாலை இருட்டு மேலும் கறுக்கத் தொடங்கியதால் வண்டிக்காரனும் வண்டியில்
    ஏறி எங்களுக்கருகே அமர்ந்து கொண்டான். விரைவில் நன்கு இருட்டிவிட்டது. பல
    மைல் தூரத்திற்கு மினுக்கும் விளக்குகளோ மனித நடமாட்டமோ ஏதுமில்லை. அச்சம், இருள், தனிமை காரணமாக நாங்கள் மிக அச்சமடைந்தோம். எங்கள் அச்சத்தின்
    உச்சமாக நாங்கள் கோரேகானுக்குப் போய்ச் சேரவேமாட்டோமேன்று கருதலானோம்.
    >நக்கா எனப்படும் சுங்கச்சாவடியை நெருங்கியவுடன் நாங்கள் வண்டியிலிருந்து குதித்துவிட்டோம். சுங்க வசூல்காரரிடம் எங்களுக்கு அக்கம் பக்கத்தில் உணவு ஏதாவது கிடைக்குமா என்று விசாரித்தோம். எனக்குப் பாரசீக மொழி நன்கு
    தெரியுமாதலால், எவ்வித சிரமமும் இன்றி அவருடன் பாரசீக மொழியில் பேசினேன்.
    அவர் மிகவும் கறாராய்ப் பேசி அங்கிருந்த குன்றுகளைச் சுட்டிக்காட்டினர்.
    எப்படியோ ஓடைக்கரையில் அந்த இரவைக் கழித்துவிட்டு மீண்டும் அதிகாலையில்
    எங்கள் கோரேகான் பயணத்தைத் தொடங்கினோம். இறுதியில் ஒருவாறாக அன்று பிற்பகல் முற்றிலும் கழித்து அரை உயிராய்க் கோரேகான் சென்றடைந்தோம்.
    >மூன்றாம் பிகழ்ச்சி நான் பரோடா சமஸ்தானத்தில் பணியாற்றிய
    காலத்தைச்சேர்ந்தது. நான் பரோடா சமஸ்தானம் அளித்திருந்த உதவித் தொகை கொண்டு வெளிநாடு சென்று கல்வி பெற்று வந்திருந்தேன். எனவே, இங்கிலாந்திலிருந்து
    திரும்பிய பின்னர், ஒப்பந்தத்தின்படி பரோடா தர்பாரில் பணியாற்றுவதற்காக
    வந்து சேர்ந்தேன். ஆனால் நான் வசிப்பதற்கு பரோடாவில் வீடு ஏதும்
    கிடைக்கவில்லை. பரோடா நகரத்திலிருந்து இந்துக்களோ முஸ்லீம்களோ எவருமே
    எனக்கு வீடு தராததால் நான் பார்சிகளின் தர்ம சாலையொன்றில் இடம் பெறத்
    தீர்மானித்தேன்.
    >நான் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் தங்கியிருந்த காலத்தில் வெளிர்
    நிறம் பெற்றுத் திரும்பியிருந்தேன். எனவே அடல்யு, சரப்யு என்ற பார்சி
    பெயரைச் சொல்லிக்கொண்டு தர்மசாலையில் வசிக்கத்தொடங்கினேன்.
    >பார்சி மேலாளர் இரண்டு ரூபாய் மாத வாடகைக்கு எனக்கு அறை தரச்
    சம்மதித்தார். விரைவிலேயே, மேதகு பரோடா மன்னர் கெய்க்வாடு அவர்கள் மகர்
    பையன் ஒருவனைக் தமது தர்பாரில் பணிக்கு அமர்த்தியுள்ளார் எனும் செய்தி
    பரவவே, தொடர்ந்து நான் பொய்யான பெயரில் பார்சி தர்ம சாலையில் வசித்து வரும் ரகசியமும் வெளியாகி விட்டது.
    >நான் அங்கு சேர்ந்த மறுநாளே காலை உணவருந்தி விட்டுப் பணிக்குச் செல்லப்
    புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, பதினைந்திருபது பேர் கொண்ட
    குண்டாந்தடியேந்திய பார்சிகளின் கூட்டம் ஒன்று என்னைச்சூழ்ந்து கொண்டு நான் யாரென்பதைக் கூறாவிடில் என்னைக் கொன்றுவிடுவதாய் மிரட்டினர்.
    >நான் ஒரு இந்து என்று கூறிய பதில் அவர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. சினமடைந்த அக்கும்பல் என்னைப் பலவாறு வசைபொழிந்து உடனடியாய் அறையைக் காலி
    செய்யக் கோரினர். எட்டு மணி நேரம் அனுமதி தருமாறு நான்பணிவுடன்
    கேட்டுக்கொண்டேன். அன்று முழுதும் எங்கு தேடியும் எனக்கு ஏதேதோ
    சாக்குபோக்குச் சொல்லி எனக்கு ஒண்ட ஒர் இடமும் அளிக்க இயலா நிலையைத்
    தெரிவித்தனர். ஏமாற்றமும் சோர்வும் என்னைச் சூழ, ‘இனியென்ன செய்வது?’’ என்ற வினா எழுந்தது.
    >என்னால் முடிவு ஏதும் எடுக்க இயலவில்லை. சோர்வும் விரக்தியும் மேலிட
    ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதேன். வீடு கிடைக்கும்
    என்ற நம்பிக்கையை அறவே இழந்து, வேலையை விட்டு நீங்குதலன்றி வேறு வழியேதும்
    இல்லாமையால், பணி துறப்புக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு அன்றிரவே
    பம்பாய்க்குப் புகைவண்டி ஏறினேன்.
    >எனது வாழ்க்கையில் நான் சந்தித்த இத்தகைய கொடுமையான நிகழ்ச்சிகளையும்
    இன்னல்களையும் உங்களில் பலரது வாழ்க்கையிலும் சந்தித்திருப்பீர்கள்.
    இவ்வாறு மனித நேயமற்ற, மதிக்காத, மனிதராகவே உங்களை நடத்ததும் ஒரு
    சமூகத்தில் வாழ்வதில் என்ன பொருள் இருக்கிறது என்று நான் உங்களை வினவ
    விரும்புகிறேன். மாறாக அவர்களோ உங்களை இழித்தும் பழித்தும் நடத்துவதுடன்
    உங்களுக்குத் தீங்கிழைக்கும் வாய்ப்புகள் எதையும் தவறவிடுவதில்லை.
    சிறிதேனும் தன்மதிப்பும் கண்ணியமும் உள்ள மனிதரெவரும் இத்தகைய பேய் மதம்
    ஒன்றில் தொடர்ந்து வாழ மனம் ஒப்பமாட்டர்கள். அடிமைப் பிழைப்பை நடத்தி வாழ
    விரும்பும் இழிஞர்கள் மட்டுமே இம்மதத்தில் தொடர்ந்து வாழமுடியும்.
    >எனது தந்தையும் முன்னோர்களும் பக்தியில் சிறந்த இந்துக்களாயிருந்தும்,
    இந்து சமயம் சுமத்திய கட்டுப்பாடுகளால், அவர்களால் கல்வியேதும் பெற இயலாமற் போயிற்று, ஆயுதம் ஏந்துவும் ஏந்த அம்மதம் அவர்களை அனுமதிக்கவில்லை. இந்து சமயத்தின் கீழ் சொத்து ஏதும் சேர்ப்பதும் அவர்களால் இயலாததாகும். இந்து
    சமயத்தில் பற்றோடு வாழ்ந்த எனது தந்தையால் இவை எதையும் பெற இயலவில்லை.
    >நான் சமஸ்கிருதம் கற்க விரும்பினேன். ஆனால், பாழும் இந்து சமயம்
    சுமத்திய கட்டுப்பாடுகளால் அதுவும் இயலாது போயிற்று. ஆனால், இப்போதோ
    கல்வி, சொத்து இவை பெறவும், ஆயுதம் ஏந்தவும் வாய்ப்பு பெற்றுள்ளேன்.
    >உங்கள் முன்னோர்களை எல்லாம் இழிவுறுத்திக் கேவலமான வாழ்க்கையில்
    அவர்களையிருத்தி, அவர்கள் மீது பல சிறுமைகளைச் சுமத்தி வறுமையிலும்
    அறியாமையிலும் அவர்களை ஆழ்த்திய பொல்லாப் புன்மைச் சமயத்தின் பிடியில்
    இனியும் நீங்கள் தொடர்ந்து இருக்கத் தான் வேண்டுமா?
    >உங்கள் முன்னோர்களைப் போன்றே நீங்களும் தாழ்ச்சியும், இழிவும்
    வறுமையும், சிறுமையும் நிறைந்த வாழ்க்கையையேற்க இசைந்தாலும் தொடர்ந்து
    வெறுக்கப்பட்டே வருவீர்கள். உங்களை மதிக்கவோ, உங்களுக்கு உதவவோ எவரும்
    முன்வரமாட்டார்கள்.
    >இத்தகைய காரணங்களால் சமயமாற்றம் என்பது இப்போது, நமக்கு முக்கியமான
    தேவையாகிறது. நீங்கள் இந்து சமயத்திலேயே தொடர்ந்து இருக்க விரும்பினால்,
    அடிமை நிலைக்கு மேல் சற்றும் உயரமுடியாது.
    >தனிப்பட்ட முறையில் எனக்கேதும் தடைகளில்லை. தீண்டாப்படாதவனாகவே
    தொடர்ந்து இருக்க நான் இணங்கினால், இந்து ஒருவர் அடையக் கூடிய எந்த
    நிலையையும் நானும்  அடைதல் கூடும். நான் இந்துவாகவே இருப்பினும்,
    இல்லையெனினும் பெரிதாக ஒன்றும் மாற்றமிராது. உயர்நீதிமன்ற நடுவராகவோ,
    சட்டமன்ற உறுப்பினராகவோ, ஏன் ஒர் அமைச்சராகவோ கூட நான் ஆகமுடியும். ஆனால்,
    உங்கள் அனைவரின் மேம்பாட்டிற்காகவும் முன்னேற்றத்திற்காவும் தான் சமய
    மாற்றம் மிகவும் தேவையென்று எனக்குத் தோன்றுகிறது.
    >இழிவும் தாழ்ச்சியும் மிக்க இந்த வாழ்க்கையிலிருந்து நீங்கள்
    விடுபட்டுப் பொன்னொளிர் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டின், சமய மாற்றம்
    என்பது தவிர்க்கவியலாத் தேவையாகும். இதனால் உங்கள் நிலையை உயர்த்திக்கொள்ள உறுதுணையும் ஒத்துழைப்பும் நல்கும் நண்பர்களும் ஆதரவாளர்களும்
    உங்களுக்குக் கிடைப்பார்கள் என்று நம்புகிறேன்.
    >உங்கள் வாழ்க்கை நிலையை மேம்படுத்த நான் சமய மாற்றத்தைத் தொடங்கியாக
    வேண்டும். இதில் எனது தனி நலன் குறித்தோ முன்னேற்றம் குறித்தோ ஒரு சிறிதும் கவலை கொள்ளவில்லை. இன்றைய காலகட்டத்தில் எனது செயல்பாடுகளின் நோக்கமும்
    முற்றிலும் உங்கள் மேம்பாடும் நலன்களும் மட்டுமே.
    அம்பேத்கரின் இந்த
    உள்ளக்குமுறலுக்கான - சமயமாற்றத்திற்கான - காரணத்தை மனிதநேயமுள்ள மனிதர்கள் யார்தான் ஆட்சேபிக்க முடியும்?
    அம்பேத்கர் சமயம் மாற முடிவெடுத்ததற்கு இச்சம்பவங்கள் மட்டும்
    முதன்மையான காரணம் அல்ல. முக்கியமான காரணங்கள் பல இருக்கின்றன.
    தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள் இல்லை என்பதை இந்து ஆச்சாரவாதிகள்
    நிரூபித்த சம்பவங்கள் அவை.அவற்றைப் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters