கங்கையின் கொடை
  • கடந்த ஒரு வருடமாக மனதினுள் வைத்து இருந்ததை இன்று வெளிக் கொண்டு வந்துள்ளேன். கடந்த வருடம் கோடை விடுமுறைக்கு எங்கே செல்வது என்று யோசித்து ரிஷிகேசம் என்று முடிவு செய்தோம். இரண்டு காரணங்கள். ஒன்று ஒரு இடத்தில அமர்ந்து முழு ஓய்வு. இரண்டு - அங்கிருந்து இரண்டு மணி நேரப் பயணத்தில் தேவப்ப்ரயாகை. ராமாயண
    கட்டுரைக்கும் போக வேண்டிய இடம்.

    தயானந்தா ஆசிரமத்தின் அருகே ஒரு வாரம் தங்கி மூன்று வேளையும் கங்கைக் குளியளுமாக இருந்தோம். மே இறுதி என்பதால் கங்கையும் மெதுவாக, குளிக்க ஏதுவாகஆழம் இன்றி நடுவிலும் கரையிலும் மணல் திட்டுக்கள் வெளியில் தெரிய ஓடிக் கொண்டிருந்தாள்.

    ஒரு நாள் கங்கையில் உள்ள வட்ட வடிவக் கற்களைத் தேடித் பொறுக்கிக் கொண்டிருந்தோம். இவை பார்க்க
    சாலக்ராமம் போல் இருக்கும். இந்தக் கற்களை வழிபடும் வழக்கம் இல்லை என்றாலும், கங்கையில் அடித்துவரப்பட்ட கற்கள் என்பதால் தேடிக் கொண்டு இருந்தோம். எங்கள் அனைவருக்கும் ஒன்று இரண்டு கற்கள் கிடைத்தன. ஆனால் என் சிறிய பெண்ணிற்கு ஒன்றும் கிடைக்கவில்லை. அவள் அழும் நிலையில் இருந்தாள். எங்கள் கற்க்களை கொடுத்தாலும் அவள் சமாதானமாகவில்லை. எனக்கு ஏன் கிடைக்கவில்லை
    என்று அழுதுகொண்டு இருந்தாள்.

    அப்போது கங்கையின் கரையில் இருந்த ஒரு குடிசையில் இருந்து ஒருவர் வேகமாக வெளியில் வந்தார். நிலைமையைப் புரிந்துகொண்டார். வேகமாக உள்ளே சென்றவர் திரும்பிய் வந்து - என் மகளைப் பார்த்து ஆ பெட்டி என்று அவளோடு தேடத் துவங்கினர். என் மகள் பார்க்காதபோது மடியில் இருந்த ஒரு கல்லை கீழே போட்டுவிட்டு, அவளை அங்கே தேடு,இங்கே தேடு என்று
    சுற்றிவிட்டு அவள் அதைக் கண்டு பிடிக்குமாறு செய்தார். என் மகளுக்கு பயங்கர சந்தோசம்.

    அவர் பீகாரில் இருந்து வந்து இங்கே கங்கைக் கரையில் ஒரு குடில் அமைத்து தங்கி உள்ளார். தச்சுத் தொழில் செய்கிறார். 20 , 22 வயதில் இரண்டு மகன்கள். அவர்களும் தச்சுத் தொழில் செய்துகொண்டு அந்தக் குடிலில் பெற்றோர்களுடன் இருக்கிறார்கள். அவர் மனைவியின் கையில் ஒரு மூன்று வயதுப் பெண் குழந்தை. அவர்களை அப்பா, அம்மா என்று கூப்பிட்டுக் கொண்டு இருந்தது.

    அவர் எங்களிடம் எதற்கு இந்தக் கற்க்களை சேகரிக்கிறீர்கள் என்று கேட்டார். நாங்கள் இவை கங்கையின் கொடை என்பதால் எடுத்துச் செல்கிறோம் என்றோம். அவர் உடனே அந்தப் பெண் குழந்தையைக் காட்டி, இவளும் கங்கையின் கொடைதான் என்றார்.

    மூன்று வருடங்களுக்கு முன்னால் ஒரு நாள் அதி காலை நாய்கள் அதிகமாகக்
    குலைக்க ஆரம்பித்தன. நாங்கள் ஓடிச்சென்று பார்த்தல் நாய்கள் ஒரு பொருளைச்
    சுற்றி நின்றுகொண்டிருந்தன. ஒரு குழந்தையின் அழுகுரலும் கேட்டது. நாய்களின் நடுவே அப்போதுதான் பிறந்த இந்தக் குழந்தை கங்கையின் கரையில், கங்கை ஒரு சென்டிமீட்டர் அதிகமாக உயர்ந்தால் எடுத்துச் செல்லும்படியாக - கொல்ல விரும்பி ஆனால் மனமில்லாமல் - விட்டுச் சென்று இருந்தது. குழந்தை கண் கூட திறக்கவில்லை. நாங்கள் அவளை எடுத்து உயிர் பிழைக்க வைத்து எங்கள் மகளாக
    வளர்த்து வருகிறோம் என்றார்.

    குழந்தையின் பெயர் என்ன என்று கேட்டோம். இவள் கங்கையைப் போலவே புனிதமானவள். எனவே இவள் பெயர் "பாவனி கங்கா " என்றார்.

    இது போன்ற சிறிய வீடுகளில்தான் உள்ளே நிறைய இடம் இருக்கிறது.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters